ஊர் கூடி!!!

I
Ilango Ramasamy
ஊர் கூடி!!!

எனது சொந்த ஊரான கரூர் ஒரு வணிக நகரம். இங்கு 1990 ஆம் ஆண்டு சதுர அடி 35 ரூபாய்க்கு வாங்கிய நிலம் இன்று 7000 ரூபாய். கோவை ரோட்டில் இருக்கும் நிலங்களெல்லாம் அடி 25000 ற்கு மேல் எனக் கேள்விப் பட்டேன். இங்கு நிலம் வாங்க விரும்பினால் உங்களுடைய வங்கியில் நீங்கள் வெள்ளையாக வைத்திருக்கும் பணத்தைக் கொடுத்து வாங்க முடியாது. இங்கு நடுத்தர மக்களிடம் கூட ஏராளமான கறுப்புப் பணம் புழங்குகிறது. 

இவ்வளவு செழுமையான ஊரில் கோடிக்கணக்கில் செலவு செய்து வீடும் வணிக நிறுவனங்களையும் கட்டுபவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கட்ட வேண்டியிருக்கும் வீட்டு வரி அல்லது சொத்து வரியை மிகச் சொற்பமான அளவு அதிகரிப்பினும் முகத்தைச் சுருக்குவர். அத்தொகையை அரசு நிர்வாகம் எக்காரணம் கொண்டும் அதிகரித்து விட முடியாது. வாக்கு வங்கி அரசியலில் பெரும்பான்மை மக்களின் கோபத்திற்கு ஆளாகும் எந்தச் செயலையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளால் அவ்வளவு சுலபத்தில் செய்து விட முடியாது. அந்த வகையில் நான் நமது ஒன்றியத்தின் துணிவையும், சாதுர்யத்தையும் நினைத்து வியக்கிறேன். அவர்கள் கொக்கு தலையில் வித வித மான வெண்ணைகளை வைத்துக் கண்ணைக் கட்டிக் கல்லாக் கட்டுவதில் வித்தகர்களாக இருக்கின்றனர். 

வீட்டு வரி, நிலவரி, சொத்து வரியை அதிகரிக்காவிட்டால் உள்ளாட்சி நிர்வாகத்தையும், கட்டமைப்புக்களையும் மேம்படுத்துவதெவ்வாறு? அப்படி மேம்படுத்தப் படாத நிர்வாகத்தாலும், உட்கட்டமைப்பில் உள்ள போதாமையாலும் ஊரில் பொழுது போக்க தூய பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், நவீன அருங்காட்சியகங்கள், கலையரங்கங்கள் என எதுவும் இல்லை. இதற்கு நிதிப் பற்றாக் குறை மட்டுமின்றி நிர்வாகத்தில் இருக்கும் குளறுபடிகளும், தடிக்குப் புல் பிடுங்கிப் போட்டுக் கணக்கெழுதும் உத்தமர்களும் காரணம். இந்தியாவில் லஞ்சமும், ஊழலும், அரசியல் வாதிகள், அதிகாரிகள், வியாபாரிகள் என்ற பிரிக்க முடியாத முக்கோணக் கூட்டணியின் அகோரப் பசிக்கு அன்னமிடும் அட்சயப் பாத்திரம். இதனை இந்தக் காலத்தில் ஒழிக்க முடியாது. 

மிக வளமையான கரூர் நகரின் தொடர்ந்து பெருகிவரும் மக்கள் தொகையால் சாலையோரங்களில் ஆங்காங்கே குப்பை மேடுகள். அமராவதி ஆறும் ராஜ வாய்க்காலும் முட்புதர்களாலும், நெகிழிப் பைகளாலும், சீமைக் கருவேல மரங்களாளும் ஆக்கிரமிக்கப் பட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன. நிலத்தடி நீர் மட்டம் 1200 அடிக்குக் கீழே போய் விட்டது

இத்தனை சிக்கல்கள் இருப்பினும் நகர மக்கள் தங்கள் தனிப்பட்ட செல்வத்தைப் பெருக்குவதிலும், நன்றாக இருக்கும் கோவில்களைப் புனரமைத்துக் குட முழுக்கு விழா செய்வதிலும், ஆடம்பர மாளிகைகளைக் கட்டியெழுப்புவதிலும், கோடிகளைக் கொட்டித் திருமணங்களைச் செய்வதிலும் முனைப்புடன் இருக்கின்றனர். 

பெரும்பான்மைச் சமூகத்திற்கு ஆன்மீகத்தையும், சமூக மற்றும் கட்சி அரசியலையும் தாண்டி தன்னலம் கருதாது பொது நலப் பணிகளில் ஈடுபடும் முனைப்பு பெரும்பாலும் இருப்பதில்லை. இங்கு ஒரிரு சிறு அறக்கட்டளைகளைத் தவிர்த்து சொல்லிக் கொள்ளும் படி பெரிதாக வேறெதுவும் இல்லை. அவர்களும் ரத்த தானம், நோட்டு புத்தகங்கள் கொடுத்தல், மரம் நடுதல், கல்விச் சாதனையாளர்களுக்கு விருது வழங்குதல் என்ற அளவில் மட்டுமே நிற்கின்றனர். 

 சூழல் இப்படி இருக்க அனைவரும் தவறாது அரசியல் வாதிகளையும் சிஸ்டத்தையும் திட்டுவதற்குக் குறைவில்லை. அப்படித் திட்டுவதிலும் நேர்மையிருக்காது. பெரும்பாலும் ஒரு தலைப் பட்சமான திட்டுக்கள் மட்டுமே. 

என்னைப் பொருத்த வரை கணக்கில் வராத ஒரே ஒரு ஒற்றை ரூபாய்ப் பணத்தை பையில் வைத்திருக்கும் எவரும் ஊழல் வாதியே. ஆனால் ஒட்டு மொத்த சமூகமும் நமது நாட்டில் நிலவும் அத்தனை சீர்கேடுகளுக்கும் ஊழல் அரசியல் வாதிகளையும், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை மட்டுமே காரணகர்த்தாக்களாக்குகிறோம். 

நமது நாடு விடுதலையடைந்த போது நமது மக்கள் தொகை தோரயமாக 35 கோடி. அவர்களில் 25 கோடி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ். 2 கோடி பேருக்கு மட்டுமே சொல்லிக் கொள்ளும் படியான வேலை. பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக உள்ளே வந்த இரண்டு கோடி அகதிகளுக்கு இருக்க இடமும், குடிக்க நீரும், உண்ண உணவும் கொடுத்து அவர்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் அரசு

அச்சமயத்தில் இந்திய அரசின் மொத்த சொத்து மதிப்பே 400 கோடி ரூபாய் மட்டும் தான். இதில் ராணுவம், அரசு அலுவலகங்கள் மற்றும் இரயில்வே போன்ற துறைகளில் உள்ள ஃபர்னிச்சர்கள் உட்பட அத்தனை அசையும் மற்றும் அசையாச் சொத்துகளும் அடக்கம். அந்த இக்கட்டான நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா அளிக்க வேண்டியிருந்தது 75 கோடி ரூபாய். 20 கோடி ரூபாயை உடனே கொடுத்து விட்டனர். மீதி 55 கோடியைக் கொடுக்கக் கையில் பணம் இல்லை. அதற்குள் இரு நாடுகளுக்கும் இடையே ஏகப்பட்ட பிணக்குகள் வேறு. இந்தியாவில் இருந்த 560 க்கும் அதிகமான குட்டி குட்டி சமஸ்தானங்களை இந்தியக் குடியரசோடு இணைக்க வேண்டிய தேவை வேறு நமது அரசை அழுத்திக் கொண்டிருந்தது. 

நமது நாடென்பது நூற்றுக் கணக்கான இனக் குழுக்கள், பல்வேறு மத நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், ஒவ்வொரு சில நூறு கிலோமீட்டர்கள் இடைவெளிக்கும் தனித்தன்மையான உணவு, உடை, மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு என கணக்கற்ற வேறுபாடுகள் கொண்ட நம்ப முடியாத மிகச் சிக்கலான புவியியல் அதிசயம். சுதந்திரத்திற்குப் பிறகு ஆறு மாதம் கூட நம்மால் ஒருங்கிணைந்த நாடாகத் தாக்குப் பிடிக்க முடியாதென்றே உலகம் நம்பியது. 

கல்வியறிவின்மை, உணவு, பால், எண்ணெய், மருந்துகள், எரிபொருள் என எல்லாவற்றிற்கும் பற்றாக்குறை தான். இருநூறு ஆண்டுகள் அடிமைத்தளையில் சுரண்டப்பட்ட தேசம் மிகப்பெரிய இருப்பியல் சிக்கலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. 

பிரிவினையால் ஏற்பட்ட மதக்கலவரங்கள் ஓய்ந்த பாடில்லை. பாகிஸ்தான் வேறு காஷ்மீருக்குள் நுழைந்து ஒரு பெரும் வரலாற்றுப் பிரச்சினைக்குப் பிள்ளையார் சுழியைப் போட்டது. அந்தச் சூழலிலும் மகாத்மா காந்தி நாம் பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை வாக்குத் தவறாது தந்துவிட வேண்டுமென அடம் பிடித்தார். 

அவரைப் போட்டுத் தள்ளி விட்டு அதனால் ஏற்படும் குழப்பத்தைப் பயன்படுத்தி காங்கிரஸை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றி விட்டு ஒரு சர்வாதிகார அரசை நிறுவினால் மட்டுமே இந்தியாவைக் காக்க முடியும் என ஒரு கூட்டம் துடித்துக் கொண்டிருந்தது. 

இத்தனை சிக்கல்களையும் எதிர்கொண்டு ஒரு மாதிரி காமா சோமாவென்றேனும் சமாளித்து 75 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாடாக நிமிர்ந்து நிற்கும் நம்மை நினைத்து நாம் பெருமை கொள்ளத்தான் வேண்டும்.

 நம்மையெல்லாம் போர், பஞ்சம், இனக்கலவரம், மத அடிப்பட வாதம், தீவிரவாதம், வன்முறை, உள்நாட்டுப் போர போன் படு குழிகளுக்குள் தள்ளிவிட்டு நாசம் செய்து விடாத உலகில் வேறெந்த நாட்டிற்கும் இல்லாத ஏராளமான சிக்கல்கள் இருந்தும இத வரை இழுத்துப் பிடித்த இந்த லட்சணத்திலாவது வண்டிய ஓட்டிக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நாம் உண்மையில் நன்றிக கடன் பட்டிருக்கிறோம். 

சுதந்திரத்திற்குப் பிறகு அடுத்தடுத்தமைத்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நமது நாட்டை மிக மெதுவாகவேயெனினும் மிக உறுதியான முன்னேற்றப் பாதையில் அழைத்து வந்திருக்கின்றன. உணவு மற்றும் பால் உற்பத்தியில் நாம். தன்னிறைவு பெற்றிருக்கிறோம். கல்வி, தொலைதொடர்பு, போக்குவரத்து, சாலை, மருத்துவம், மின் வசதி, போன்ற அடிப்படைத் தேவைகளை நாம் நமது பெரும்பான்மைச் சமூகத்திற்குக் கொண்டு சேர்த்திருப்பதை நினைத்து உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன்.  

அடுத்தடுத்து அமைந்த அரசுகள் நாட்டிற்க்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் இத்தனை செய்திருக்கும் போது, மக்களாகிய நாம் நமக்காகவும், நமது சமூத்திற்காகவும் ஆற்றிய பங்களிப்பு என்ன? நம்மிடம் நேர்மையும், சமூக ஒழுங்கும், கடமையுணர்ச்சியும், உண்மையான தேசப் பற்றும், தியாக உணர்ச்சியும் மருந்தளவிற்காவது இருக்கிறதா

தனி மனிதர்களாகிய நம்மால் என்ன செய்து விட முடியும்? எப்படிப் பட்ட மாற்றங்களை ஏற்படுத்திட முடியும் என்ற கேள்விக்கு விடையாக கல்வித் தளத்தில் சேவையாற்றும் அகரம், மாற்றம் போன்ற அறக்கட்டளைகளைச் சுட்டலாம். 

பொதுமக்களிடம் நன்கொடை பெற்று சமூகப் பணியாற்றும் எத்தனையோ நல்ல மனிதர்களது முயற்சிகளை சமூக ஊடகங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களது நலனுக்காகப் பாடுபடுவோர், கல்வி, மருத்துவ மற்றும் இதர நலத்திட்ட உதவிகளை வழங்குவோர், பொதுக் கிணறுகளைப் புனரமைப்போர், ஏரிகளைப் புனரமைப்போர் என நினைத்த மாத்திரத்தில் தன்னலமற்ற தனிமனிதர்களின் பெயர்கள் கண்முன் தோன்றுகின்றன. ஆனால் தனி மனிதர்களது முயற்சிகள் நிரந்தரத் தீர்வையோ அல்லது ஒட்டுமொத்த சமூகச் சிக்கல்களுக்கான தீர்வையோ தந்து விட முடியாது. 

இப்படி எல்லாவற்றையும் அரசோ அல்லது தனி நபரால் அல்லது தன்னார்வம் கொண்ட சிறு குழுக்களே செய்ய வேண்டும் என எதிர்பார்க்காது தத்தம் பகுதியில் உள்ள சிக்கல்களை அப்பகுதி மக்களே ஒன்றுகூடித் தீர்த்துக் கொள்ளும் ஒரு கலாச்சாரம் உருவாக வேண்டும். 

யாரோ ஒருவர் வந்து நமது வீட்டை மராமத்துப் பார்த்து, சுத்தம் செய்து கொடுத்து விட்டுச் சென்றால் நமக்கு அதன் அருமை தெரியாது. நமது தொடர் மற்றும் அயராத உழைப்பாலும், கூட்டு முயற்சியாலும் நிர்மாணிக்கப்படும் அமைப்புகளே காலத்தைக் கடந்து சீராக இயங்கும்

உதாரணத்திற்கு கரூர் நகரின் தேவைகள்

திடக்கழிவு மேலாண்மைத் திட்டம். 

கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்டம். 

மழைநீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்புத் திட்டம்.

பொதுக்கழிப்பிடங்கள். 

விளையாட்டு மைதானங்கள்.

பூங்காக்கள்.

இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள்.

&

முதியோர் இல்லங்கள். 

ஊரின் பெரிய மனிதர்கள் ஒன்றிணைந்து இரண்டாண்டு அல்லது மூன்றாண்டுத் திட்டங்களை வகுத்துக் கொண்டு இவற்றில் ஏதேனும் ஒரு சிக்கலை நிரந்தரமாகத் தீர்க்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். 

கரூரைச் சுற்றியுள்ள பல்வேறு குல தெய்வக் கோவில்களின் குடிப்பாட்டுக் காரர்கள் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு மொரு முறை வீட்டிற்கு வீடு வரி போட்டு வசூலித்து மற்ற கோவில்களை விட சிறப்பாக குடமுழுக்கு நடத்திக் காட்டிட வேண்டும் என வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகின்றனர். இது போன்ற இனக்குழுக்களுக்குள் அறிவிக்கப்படாத தொரு போட்டி நிலவுவதை அனைவராலும் உணர முடியும். 

அந்தக் கோவில் அறங்காவலர் குழுக்கள் ஒன்று திரண்டு பேசி, இரண்டு அல்லது மூன்று குடிப்பாட்டுக் காரர்கள் ஒரணியாகச் சேர்ந்து ஒரு குறிப்பிடட சிக்கலைத் தீர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாம். இப்படி ஒன்று கூடிப் பணியாற்றும் போது சிரமம் குறையும். ஒற்றுமையும் நட்புணர்வும் வளரும். குறிப்பிட்ட ஒரு சாதியினரோடு பிற சாதிகளும், மத அமைப்புகளும் இணைந்து கொண்டால் அது மேலும் நன்மை பயக்கும்

 அதே சமயம் ஒவ்வொரு அணிக்கும மற்ற அணிகளை வி சிறப்பாகச செயல்ப வேண்டும என்ற உந்துதலும் இருக்கும். வெற்று ஆடம்பரத்திற்கு விழ நடத்தி கஷ்டப்பட்டு கட்டா வரி வசூல செய் காசை விரயமாக்கி ஊரைக் குப்பையாக்குவதற்குப் பதில் நற்பணிக்காக நன்கொடையாக வசூலித்த காசை முறையாகவும், திறமையாகவும் செலவு செய்து புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்கி நிரந்தரமாக ஒரு அறக்கட்டளையின் மூலம தாங்கள் நிர்மாணித்த நகர சேவையை ஒவ்வொரு குழுவும் நேர்த்தியா நிர்வாகம் செய்து வர வேண்டும். 

தொடர்ந்து கிடைக்கும் நன்கொடைகளைப் பயன்படுத்தி கட்டமைப்புக்களையும், சேவைகளையும் அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். அச்சேவைகளைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்

வெட்டியாக ஆடம்பரத் திருமணங்களிலும், வீடுகளிலும், கோவில் திருவிழாக்களிலும், சாதி சங்க மாநாடுகளிலும் ஒரிரு நாட்களில் அள்ளி இறைக்கப்படும் கருப்புப் பணத்தின் ஒரு சிறு பகுதியை மக்கள் நலப்பணிகளுக்குச் செலவிட்டாலே நமது பெரும்பாலான சிக்கல்களுக்கு நம்மால் விடை காண முடியும். இது தான் நாம் நமது அடுத்த தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடம்

இப்படி நேர்மறையான செயல்களில் முனைப்புடன் களமிறங்கினால் சமூக நல்லிணக்கமும் பெருகும். கட்சி அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி ஒற்றுமையுடன் அரசிடம் கோரிக்கை வைக்கும் பொழுது அரசும் மக்களுக்கு வேண்டிய அனுமதிகளையும், உதவிகளையும் விரைந்து செய்து கொடுக்கும்

இப்படி ஊர் கூடித் தேரிழுத்தால் அதன் பலன்களைக் கண்டு பிற ஊர்களும் அத்தகைய நேர்மறையான முயற்சிகளில் ஈடுபடும். ஒவ்வொரு நகரத்திற்கும் பிற நகரை விடச் சிறந்து செயல்பட வேண்டும் என்ற வேகம் பிறக்கும். உட்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, சூழல் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, சுற்றுலா, விளையாட்டு என அனைத்துத் தளங்களிலும் நகரங்களுக்கிடையே போட்டி மனப்பான்மை உருவாக வேண்டும். இது மறைமுகமாக தொழில் வளர்ச்சிக்கும், புதிய வேலை வாய்ப்புக் களுக்கும் வழி கோலும்

இப்படிப் பட்ட கூட்டு முயற்சிக்கு மிகச் சிறந்த உதாரணம் அமுல் நிறுவனமும் இந்தியாவின் வெண்மைப் புரட்சியும். ஆனந்த் என்ற சிறு நகரத்தின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்று கூடி சர்தார் வல்லபாய் பட்டேலிடம் தங்கள் பிரச்சினைகளைத் களைய அவர் உதவிட வேண்டும் எனக் கோரிய போது, “நீங்கள் ஒன்றிணைந்து உழைப்பதற்கும், போராடுவதற்கும், தியாகத்திற்கும், வலியைத் தாங்கவும் தயாரானால் நான் உங்களை வழி நடத்தத் தயார்” எனக் கூறினார். 

அத்தோடு நில்லாமல் திரிபுவன் தாஸ் படேல் என்ற சமூக நல ஆர்வலரது தலைமையின் கீழ் ஒரு சிறு கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. முறையான கல்வியறிவில்லாத அந்தக் காந்தியவாதி அக்கூட்டுறவு நிறுவனத்தைத் தலைமை தாங்கி நடத்த வர்கீஸ் குரியன் என்ற பொறியாளரைச் சம்மதிக்க வைத்தார். நேர்மையும், முனைப்பும் கொண்ட அந்தத் தன்னலமற்ற ஆளுமைகளின் வழிகாட்டுதலாலும், அடுத்தடுத்து அமைந்த அரசுகள் அவர்களுக்கு வழங்கிய ஆதரவாலும் பெரும் சவால்களை மீறி அவர்களால் இந்தியாவை உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் நாடாக உயர்த்த முடிந்தது. 

மக்கள் சக்தியே இந்தியாவின் ஆன்ம பலம். அதனை நற்பணிகளுக்கு ஒருங்கிணைத்தால் நம்மால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. இது தான் நாம் செய்ய வேண்டியது.

 இதுவ இந்த 79 ஆவது சுதந்திர தினத்தன்று என மனதில தோன்றி ஆசையும கனவும். 

அனைவருக்கும் இனிய சுதந்திர தின விழா நல் வாழ்த்துகள்.

வாழ்க இந்தியா!!! வளர்க நம் மணித்திரு நாடு!!! 

#கதைங்கோ

#எண்ணங்கள்

#சமூக_பிரச்சனைகள்

#சுதந்திரதினம்

4 வாசிப்புகள்
பகிர்: 0 பகிர்வுகள்

கருத்துகள் (0)

இன்னும் கருத்துகள் எதுவும் இல்லை. முதல் கருத்தை எழுதவும்!