ஓநாய் குலச் சின்னம்!!!

I
Ilango Ramasamy
ஓநாய் குலச் சின்னம்!!!

"உல்ஃப் டோட்டம்" - "ஓநாய் குலச் சின்னம்" - பிண்ணணி, வரலாறு, பல்லுயிர்ச் சூழல் மற்றும் கதைச் சுருக்கம்    

Post Image

மூலம்: ஜியாங் ரோங் - தமிழில் - சி. மோகன் – 

சீன மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தின் வழியாக தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு அருமையான நாவல் "உல்ஃப் டோட்டம்". நவீன சீனாவின் தந்தை என்று போற்றப் படக்கூடிய சேர்மன் மாவோ வின் சிவப்புப் புத்தகத்திற்கு அடுத்து சீனர்களால் மிக அதிக அளவு விரும்பி வாசிக்கப்பட்ட இந்த நூல் ஒரு செமி பிக்க்ஷன்.   

இந்த நாவல் காட்சிப் படுத்தும் முக்கிய முரண்பாடு இரண்டு வாழ்வியல் முறைகளுக்கிடையேயானது. இந்த நூல் ஒரு வலிமையான கலாச்சாரம் மற்றொரு கலாச்சாரத்தின் மீது ஏற்படுத்திய தாக்கத்தையும் அதன் விளைவுகளையும் மிக நுணுக்கமாக நமக்கு விவரிக்கிறது. 

செங்கிஸ்கான் வழியில் வந்த மங்கோலிய நாடோடி மக்களின் அடங்க மறுக்கும், சுதந்திரமான, போட்டிகளும், அபாயங்களும், மூர்க்கத் தனமும் நிறைந்த கூட்டுறவு, மேய்ச்சல் மற்றும் வேட்டை வாழ்வியல் முறைக்கும், ஹன் வம்சா வழியில் வந்த கன்பூசியஸ் தத்துவத்தைப் பின்பற்றி வாழும் விவசாய, வீரமற்ற ஆட்டு மந்தை வாழ்வியல் முறைக்கும் இடையேயான முரண்பாடுகளே இந்தப் புதினத்தின் மைய இழை

ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட மங்கோலிய நாடோடி வாழ்வியல் முறையையும், பத்தாயிரம் ஆண்டுகளாகப் பரிணாம வளர்ச்சிபெற்று வளர்ந்த இன்னர் மங்கோலிய ஸ்டெப்பி புல்வெளிப் பிரதேசத்தின் அற்புதமான பல்லுயிர்ச் சூழலையும், சீனாவின் வல்லாதிக்க கம்யூனிச அரசின் கலாச்சாரப் புரட்சி எப்படிச் சிதைத்தது என்பதை நூலாசிரியர் அற்புதமாக ஆவணப் படுத்தியிருக்கிறார். 

1966 ஆம் ஆண்டு தனது 21 ஆம் வயதில் பீஜிங்கிலிருந்து, தொலை தூரத்தில் இருந்த இன்னர் மங்கோலிய மேய்ச்சல் நிலங்களின் பூர்வகுடிகளான மங்கோலிய நாடோடி மக்களோடு சேர்ந்து பணிபுரிய தன்னார்வலராகச் சென்றார் ஜியாங் ரோங். மற்ற மாணவர்களால் பெரிதும் விரும்பப் பட்ட ராணுவ முகாம்களுக்குச் சென்றால் இரண்டு பெட்டிகள் நிறைய தான் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப் படக் கூடும் என்னும் அச்சத்தினாலேயே தான் தொலை தூரம் சென்றதாகப் பின்னாளில் அவரே கூறியிருக்கிறார். 

ஒருபுறம் மாவோ வின் செம்படை உறுப்பினராக இருந்தபோதும் இலக்கியத்தின் மீதிருந்த காதலால் சட்டவிரோதமாக அப்புத்தகங்களை அவர் தன்னோடு பதுக்கி எடுத்துச் சென்றார். அவருடைய பதினோரு வருட மேய்ப்பர்கள் உடனான இயற்கையோடு இயைந்த வாழ்வும், அந்த மங்கோலிய நாடோடி மக்களும், அவர்கள் வாழ்க்கை முறையும் அவருக்கு அளித்த பட்டறிவுமே இந்த நூலுக்கான மூலதனம். 1971 லேயே இந்த நாவலுக்கான விதை அவர் மனதில் விழுந்து விட்ட போதிலும் 1978 இல் அவர் பெய்ஜிங் திரும்பும் வரை எதையும் எழுதத் தொடங்க வில்லை

அதற்காக அவர் பெய்ஜிங் போனவுடன் எழுத ஆரம்பித்து விட்டதாக நினைத்து விடாதீர்கள். தல முக்கி முனகி எழுத ஆரம்பித்தது 1991 லதான். முதல் பிரதியை முடித்து பதிப்பாளருக்கு அனுப்பி வைக்கவே அவருக்கு ஆறு வருஷம் பிடித்திருக்கிறது. மனுஷன் அவரோட ரூமை விட்டு வெளியே தலை காட்டாமல் பேய்த்தனமாக உழைத்திருந்திருக்கிறார். அவருடைய மனைவிக்கு கூட தான் என்ன செய்கிறார் என்பதைச் சொல்லாது, மிக மிக ரகசியமாக இந்த நாவலை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியிருக்கிறார். ஒரு வழியா கடைசிப் பிரதியை முடித்து 2003 இல் புத்தகம் அச்சேறிய பொழுது இன்னொரு ஆறு வருஷம் ஓடிப் போய் இருந்தது

அவருடைய புனைப் பெயரில் வெளியான நாவல், இம்மீடியட் ஹிட். சீனாவில் பல விருதுகளை வாங்கிக் குவித்த இந்த நாவல் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இன்டர்நேஷனல் ஹிட்டடித்தது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக ஜியாங் ரோங்க் தன்னுடைய அடையாளத்தை வெளியிடவேயில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவருடைய புனைப்பெயரில் பாகம் இரண்டு, மூன்று என்று தொடர்ச்சியாகப் புத்தகங்களை வெளியிட்டு எவனோ கல்லா கட்ட மனுஷன் 2007 ஏப்ரல் மாதம், தான் இதுவரையில் தனது இரண்டாவது நாவலை எழுத ஆரம்பிக்கவேயில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட வேண்டியதாயிற்று. 2007 ஆண்டு - நவம்பர் மாதம் "உல்ஃப் டோட்டம்" நாவலுக்கு "மேன் ஏசியன் லிட்டரரி அவார்ட்" கிடைத்தது. அந்த விருதிற்கான விண்ணப்பத்தில் அவர் தன்னுடைய புகைப்படத்தையும், உண்மைப் பெயரையும் கொடுத்திருக்க, நடுவர்களின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் அவருடைய பெயர் உலகப் புகழ் பெற்றது. ஆனால் பாவம் சீன அரசு அவருக்கு பாஸ்போர்ட் தர மறுத்து விட்டதால் அந்த விருதை வாங்க அவரால் நேரில் செல்ல முடியவில்லை. 

ஆனால் இதெல்லாம் மார்க்கெட்டிங் கிம்மிக் என்ற விமர்சனங்களும் எழாமலில்லை. அதே போல ஜியாங் ரோங், மூர்க்கத் தனமான ரத்தவெறி பிடித்த, மற்ற இனக் குழுக்களைக் கொன்று குவித்த மங்கோலிய வாழ்வியல் முறையை ரொமாண்டிசைஸ் பண்ணியிருப்பது அக்மார்க் பாசிசம் என்ற சாருவின் விமர்சனத்தையும்; எந்த மங்கோலிய இனக் குழுவும் ஓநாய்களைத் தங்கள் குலச் சின்னமாகப் போற்றியதில்லை, ஏனெனில் மங்கோலிய ஸ்டெப்பி புல்வெளியின் மிகப் பெரிய இம்சையே ஓநாய்கள் தான் என்ற ஒரு மங்கோலிய எழுத்தாளரின் விமர்சனத்தையும் கருத்தில் வைத்துக் கொண்டு இந்த நாவலைப் படிப்பது நமக்கு ஒரு சமநிலையான பார்வையைக் கொடுக்கக் கூடும்.  

எனவே இந்த சுவையான நூலில் எழுதப் பற்றிருப்பதில் எது உண்மை, எது புனைவு என்பதை வாசகர்களாகிய நாம் தான் மேலதிக ஆராய்ச்சி செய்து கண்டறிந்து கொள்ள வேண்டும். என்னளவில் ஆசிரியரின் தர்க்கம் வலுவானதாகவும், உண்மையானதாகவுமே தோன்றுகிறது.    

வரலாற்றுப் பிண்ணனி

ஆசிரியரைப் பற்றியே வெகு நேரம் உருட்டி விட்டேன். இந்தக் கதையை நன்கு புரிந்து கொள்ள உள்ளே நுழைவதற்கு முன்பே கொஞ்சம் சீன வரலாற்றை மேய்வது நல்லது அதனால் இன்னும் கொஞ்ச நேரம் பொறுமை காக்க வேண்டுகிறேன்.   

சீன ஹன் வம்சா வழியில் வந்த விவசாயக் கலாச்சாரம் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கம்யூனிசப் புரட்சிக்குப் பிறகு பெரும் பாய்ச்சலோடு உற்பத்திக் கலாச்சாரத்திற்கு மாறியது. பல லட்சக்கணக்கான மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்க சேர்மன் மா சே துங் இன் தலைமையிலான சீன மக்கள் குடியரசுக் கட்சி (People's Republic of China)1943 முதல் 1976 இல் அவர் இறக்கும் வரை பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியது

ஒரு காலனியாதிக்க நாடாக அடிமைப்பட்டுக் கிடந்த சீனா, சுதந்திரக் கம்யூனிசக் குடியரசாக வீறு கொண்டு எழுந்தது. கொரிய மற்றும் வியட்நாம் யுத்தங்களில் உலகின் வல்லரசான அமெரிக்காவிற்க்கே பெரும் குடைச்சலைக் கொடுக்கும் அளவுக்கு நாட்டைக் கட்டி எழுப்பியது சேர்மன் மாவோ தான். எனினும், பல லட்சக்கணக்கான சீனர்களை அரசியல் காரணங்களுக்காகவும், சிறைக் கொடுமைகளாலும், கணக்கு வழக்கற்ற மரண தண்டனைகளாலும் போட்டுத் தள்ளிய புண்ணியமும் அவரையே சேரும். அவருடைய தத்துப் பித்துத் திட்டங்களின் விளைவால் உருவான பஞ்சங்கள் மற்றும் வறுமையால் பரலோகம் சென்றவர்கள் சில பல லட்சங்கள் என்பது வரலாறு. 

தன்னுடைய தொடர் சொதப்பல்களால் சரிந்த இமேஜைத் தூக்கி நிறுத்த தலை, தனது கடைசிப் பத்தாண்டுகளில் செயல்படுத்திய திட்டத்திற்குப் பெயர் "கலாச்சாரப் புரட்சி". ஒருபுறம் முதலாளித்துவ சிந்தனைகளையும், கட்டமைப்புகளையும் வேரோடு பிடுங்கி எறிவது மறுபுறம் பாரம்பரிய சிந்தனைகள், வாழ்வியல் முறைகள், மற்றும் கலாச்சாரச் சின்னங்களை முற்றிலுமாகத் துடைத்துச் சுத்தம் செய்வது என்ற மோடி மஸ்தான் திட்டமே இந்தக் கலாச்சாரப் புரட்சி. 

ஆரம்பம்

இனி கதை நாயகன் சென் செங்கோடு (Chen Zheng) நாமும் இன்னர் மங்கோலியாவுக்குள் நுழைவோம். பச்சைப் பசேலென்ற, மலைகள் சூழ்ந்த அந்தப் புல்வெளிப் பிரதேசத்திற்கு "உலாண்பொலாங்" (Ulanbolong) என்று பெயர். அங்கு 600 - 700 பேர் அடங்கிய மங்கோலிய நாடோடி இனக்குழு ஒன்று கூடாரங்கள் அடித்துத் தங்கியிருக்கின்றது. அந்தக் குழுவின் தலைவர் பில்ஜீ என்னும் அனுபவம் வாய்ந்த கிழவர். பெய்ஜிங்கிலிருந்து வந்துள்ள இருபத்து ஒரு வயதே ஆன "சென்" ஐ "பில்ஜீ" சற்று இகழ்ச்சியோடே பார்க்கிறார். 

சீன மக்களின் ஓரிடத்தில் தங்கி விவாசாயம் செய்து, வழி, வழியாக அரசனுக்கும், மந்திரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அடிபணிந்து வாழும் வாழ்க்கை முறையால் அவர்களை ஆட்டு மந்தைகள் என்று விமர்சிக்கிறார் “பில்ஜீ” அதை விட மிகவும் கடுமையான இயற்கைச் சூழலில் கடந்த ஆயிரம் வருட பாரம்பரியம் மாறாமல் வாழும் தங்கள் நாடோடி வாழ்க்கை முறைக்கும், தங்களுடைய வாழ்வாதாரமான புல்வெளி நிலத்திற்கும் சீன அரசால் ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்தும் அவருக்கு அதீத கோபம் இருக்கிறது. 

சென் செங்குக்கோ, ஓநாய்க் கூட்டங்களால் தாங்களும் தங்களுடைய ஆடு மாடுகள் மற்றும் குதிரைகளும் எந்த நேரமும் தாக்கப் படலாம் என்னும் சூழலில் வாழும் இம்மக்கள் எதற்கு ஓநாயை தங்கள் குலச் சின்னமாகக் கொண்டிருக்கின்றனர் என்பது பெரும் குழப்பமாக இருக்கிறது. ஒருபுறம் ஓநாய்களை வேட்டையாடுவதும் ஆனால் அதே சமயம் அவைகளைத் தங்கள் தெய்வமான டெங்கருக்குச் (Tenger) சமமாக தங்கள் இனத்தின் பாதுகாவலர்களாகப் 

போற்றுவதுமான மங்கோலிய நாடோடிக் கலாச்சாரம் சென் செங்கிற்குப் பிடி படவில்லை. 

இங்கு வருவதற்கு முன்பு வரை மற்ற சீனர்களைப் போலவே சென் செங்கும், ஓநாய்களை மிகக் கொடூரமான, ரத்த வெறி பிடித்த மூர்க்கமான விலங்குகள் என்றே நினைத்திருந்தான். ஆனால் முதியவர் பில்ஜீ, பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான "உலாண்பொலாங்" என்னும் அந்த மங்கோலியப் புல்வெளியைப் பசுமை மாறாமல் காத்து வருபவை ஓநாய்கள் தாம் எனவும், எப்படி ஓநாய்கள் அந்த செழுமையான பல்லுயிர்ச் சூழலின் அச்சாணியாக விளங்குகின்றன என்பதையும் மெல்ல மெல்ல எடுத்துக் காட்டிப் புரிய வைக்கிறார்.  

"உலாண்பொலாங்” பல்லுயிர்ச் சூழல்:

வசந்த காலத்தில் மரகதப் பச்சைப் பட்டாடையும், பனிக்காலத்தில் வெள்ளைப் பட்டும், கோடைக்காலத்தில் மஞ்சள் பட்டும் உடுத்திக் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும் பேரழகு கொண்ட மங்கோலிய ஸ்டெப்பி புல்வெளியின் ஒரு பகுதியே "உலாண்பொலாங். மங்கோலியாவிற்கும், பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஆப் சீனாவிற்கும் இடைப்பட்ட ஒரு சுயாட்சி அதிகாரம் கொண்ட இன்னர் மங்கோலியாவின் ஒரு பகுதியே "உலாண்பொலாங்” இந்தப் புல்வெளிதான் அந்தப் பல்லுயிர்ச்சூழலின் பேருயிர். 

இதனை ஆதாரமாகக் கொண்டே மற்ற அனைத்துச் சிற்றுயிர்களான ஓநாய்களும், மான்களும், குதிரைகளும், ஆடுகளும், மாடுகளும், நரிகளும், முயல்களும், அணில்களும், எலிகளும், நாய்களும் கடைசியாக மனிதர்களும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆம் முதியவர் பில்ஜீ யைப் பொறுத்தவரை புல்வெளி தான் பேருயிர் மனிதன் உட்பட மற்ற அனைத்து உயிரினங்களும் சிற்றுயிர்களே. ஆனால் சீன விவசாயக் கலாச்சாரத்தில் மனிதன் தான் பேருயிர். தான் உண்டு, வம்ச விருத்தி செய்ய தன்னைச் சுற்றியுள்ள உயிர்கள் அனைத்தையும் வகை தொகை இல்லாமல் சீனர்கள் அழிக்கின்றனர் என்பது பெரியவரின் குற்றச்சாட்டு. 

நல்ல ஊட்டச்சத்து மிக்க செழித்து வளர்ந்துள்ள புல்வெளியே, மனிதர்களின் வாழ்வாதாரம். தங்களுக்கான உற்பத்தியில் 70% ஆடு வளர்ப்பின் மூலமே இந்த மக்கள் பெறுகின்றனர். ஆட்டு ரோமமும், இறைச்சியும், பாலும் இவர்களுடைய முக்கிய உற்பத்தி. கூடவே மாடுகளும் மேய்ச்சலுக்கு உதவுவதற்காகவும், போக்குவரத்திற்காகவும் குதிரைகளையும் வளர்க்கின்றனர். 

இந்த விலங்குகள் அனைத்துமே இந்தப் புல்வெளிக்குப் பாரம்தான். ஒரு ஆடு ஒரு வருடத்திற்கு 20 ஏக்கர் அளவிலான புல்லை மேயுமென்றால் ஒரு குதிரைக்கு 200 ஏக்கர் பரப்பளவிலான புல் தேவைப் படும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு முறை இந்தக் கால்நடைகள் சிறுநீர் கழிக்கும் பொழுதும் அந்த இடத்தில உள்ள புற்கள் கருகிப் போகும். நூற்றுக் கணக்கான கிலோ எடையுள்ள மாடுகள் மற்றும் குதிரைகளின் குளம்புகளும், பாரமேற்றப் பட்ட வண்டிகளும் இந்தப் புல்வெளிக்குப் பெரும் சுமையே. தொடர்ந்து ஓரிடத்தில் நில்லாமல் நகர்ந்து கொண்டே இருந்தால் தான் இந்தப் புல்வெளிப் பிரதேசம், சுமையும், அழுத்தமும் நீங்கி மூச்சு விட்டு, புத்துணர்ச்சி பெற்று தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். 

ஒருமுறை ஓரிடத்திலிருந்து தங்கள் கூடாரங்களைப் பிரித்துக் கொண்டு கிளம்பினால் மீண்டும் அந்த இடத்திற்கு வந்து சேர இந்த மக்களுக்கு நான்கைந்து வருடங்கள் கூட ஆகுமாம். இதன் காரணமாகவே ஒவ்வொரு பருவத்திற்கும் அதற்குத் தக்க பகுதிக்கு இடம் பெயர்வதை இந்த நாடோடி மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 

கடுமையான பனிக்காலத்தில் இடுப்புயரத்தில் இருந்து ஆளுயரப் புற்கள் வளர்ந்துள்ள இடத்தில் முகாமிடுவார்கள். மற்ற பருவங்களில் அங்கு முகாமிட்டு இருக்கும் புல்லையெல்லாம் மேய்ந்து விட்டால் பனிக்காலத்தில் கால்நடைகளுக்கான உணவுக்கு என்ன செய்வது? வசந்த காலத்தில் நல்ல சுவையான ஆனால் குட்டையான புல் உள்ள இடத்தைத் தேர்ந்தெடுப்பர். கோடைக்காலத்தில் மேய்ச்சல் நிலத்துக்கு அருகிலேயே நீர் நிலைகள் உள்ள இடமாகப் பார்த்து முகாமிட வேண்டும். இல்லை என்றால் தண்ணீரைத் தேடி அலைந்தே கால்நடைகள் செத்துப் போக வேண்டி வரும். பொதுவாகவே மலையுச்சிகளில் தான் இப்படிப்பட்ட இடங்கள் இருக்கும். அங்கேயே இருந்தால் பனிக்காலத்தில், குளிர் தாங்காமல் விலங்குகள் அனைத்தும் விறைத்துச் செத்துவிடும். இலையுதிர் காலத்தில் தான் புற்களில் விதைகள் இருக்கும். விதைகளின் எண்ணைச் சத்து விலங்குகளுக்கு மிக அவசியம். அதனால் அந்தப் பருவத்திற்கு ஒரு புது மேய்ச்சல் நிலத்தை நோக்கிப் போவதே பயனுள்ளதாக இருக்கும்

இந்த ஸ்டெப்பி புல்வெளியில் எந்தப் பகுதியும் பல்வேறு இடைஞ்சல்களையும், ஏதாவதொரு பயனையும் கொண்டிருக்கும். அதனால் மேய்ச்சல் நிலத்தைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாகத் திட்டமிட்டு முடிந்தளவு இடைஞ்சல்கள் இல்லாத ஆனால் தங்களது மிக முக்கியத் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய இடத்தைக் கண்டறிந்து தேர்வு செய்வதே புத்திசாலித் தனம்

இப்படி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் செழித்து வளர்ந்திருக்கும் புற்களை மேய்ந்து தள்ளும் ஆடுமாடுகளையும், குதிரைகளையும் விட இந்த ஸ்டெப்பி புல்வெளிக்கு மிகப் பெரும் ஊறு விளைவிக்கும் நான்கு அபாயகரமான விலங்குகள் முறையே மான்கள், மர்மோட்டுகள் எனப்படும் பேரணில்கள், காட்டு முயல்கள் மற்றும் வயல் எலிகள். 

ஒரு சிறு மனிதக் கூட்டத்தால் இந்த நான்கு உயிரினங்களின் இனப் பெருக்கத்தை வேட்டையாடிக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. இந்த உயிரினங்கள் பல்கிப் பெருகினால் ஒரு சில வருடங்களுக்குள்ளாகவே புல்வெளிப் பிரதேசம் முழுவதும் பாலை நிலமாகிவிடும். இங்குதான் ஓநாய்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த நான்கு உயிரினங்களும் ஓநாய்களின் அகோர பசிக்கு தீனிபோடமுடியாத போது மட்டுமே அவைகள், மனிதர்களின் ஆடுமாடுகள் மற்றும் குதிரைகள் மீது தங்கள் கவனத்தைத் திசை திரும்புகின்றன. அதே சமயம் ஓநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டால் அது மனிதர்களுக்குப் பெரும் சிக்கலாக உருவெடுத்துவிடக் கூடும். 

இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் இனப்பெருக்கக் காலத்தில் மனிதர்கள் ஓநாய்களின் பதுங்கிடங்களைக் (குகைகள், குழிகள் ) கண்டுபிடித்து, தாய் ஓநாய்கள் வேட்டைக்குச் சென்றிருக்கும் சமயத்தில் குட்டிகளை வேட்டையாடி அழிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஓநாய்க் குட்டிகளின் மிருதுவான தோலுக்கு நல்ல விலை கிடைக்கும். வளர்ந்த பிறகு அவற்றை வேட்டையாடிக் கொல்வதை விட குட்டியாக இருக்கும் பொழுதே பிடித்துக் கொள்வது எளிது. தங்கள் குட்டிகளைக் காக்க ஓநாய்கள் பயன்படுத்தும் தந்திரங்களும், அவை காட்டும் சாதுர்யமும், வீரமும் மனிதர்களின் இருப்பியலுக்கு விடப்படும் கடும் சவால்கள். ஆனால் இந்த வேட்டையும் ஒரு கட்டுப்பாட்டோடு மட்டுமே நடத்தப் படும்

ஸ்டெப்பி புல்வெளிகளின் மிகப் பெரும் எதிரியாக ஆசிரியர் சுட்டுவது ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாகத் திரியும் மான்களைத் தான். இந்த மான் கூட்டங்கள் மேய்வதன் மூலம் மட்டுமல்லாமல் அவற்றின் வேகமான குளம்புகளில் மிதிபட்டு சிதைக்கப் படுவதாலும் புல்வெளி நிலதிற்குப் பெரும் பாதிப்பு. மான்கள் பயப்படுவது ஓநாய்களுக்கு மட்டுமே. அவைகளின் வேகத்திற்கும், எண்ணிக்கைக்கும் மனிதர்களால் ஒரு நாளும் ஈடு கொடுக்க முடியாது. மான்களின் தோலும், இறைச்சியும், கொம்புகளும் இந்த மேய்ச்சல் நில மனிதர்களுக்குப் பெரும் பயனுள்ளவை. ஆனால், அவைகளைப் பெருமளவில் வேட்டையாட முடியாத மனிதர்களுக்கு ஓநாய்களின் மான் வேட்டை எவ்வளவு பெரிய உதவியைச் செய்கிறது என்பது இந்த நாவலில் விரிவாக விளக்கப் பட்டுள்ளது. 

ஓநாய்களால் மான்களின் அளவுக்கு வேகமாகவும், நீண்ட தொலைவும் ஓட முடியாது. எனவே மான்களை வீழ்த்த அவைகள் மிகவும் திட்டமிட்டு, ஒரு குழுவாகத் தாக்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஆனால் மர்மோட்டுக்கள் எனப்படும் பேரணில்களையும், முயல்களையும், எலிகளையும் வேட்டையாடுவது ஓநாய்களுக்கு எளிது. ஒரு ஓநாய்க்கு, மூன்று அல்லது நான்கு அணில்களை அடித்தால் ஒரு நாளுக்குப் போதுமான உணவு கிடைத்துவிடும். அதனால் மான்கள் கிடைக்காத பட்சத்தில் ஓநாய்களின் பார்வை இந்தச் சிறு உயிரினங்களின் மீது தான் திரும்பும். மேலும் வேகமாக ஓட முடியாத வயதான ஓநாய்கள் மற்றும் அடிபட்டுப் பலவீனமான நிலையில் இருக்கும் ஓநாய்கள், கூட்டத்தில் இருந்து விலக்கப் பட்டு விடும். இப்படித் தனியே வாழ வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் ஓநாய்களுக்கும் இது போன்ற கொறிக்கும் விலங்குகளே இரை

மற்றொரு புறம் இளம் குட்டிகளை ஈன்ற தாய் ஓநாய்கள் மனிதர்களின் கூடாரங்களில் இருந்தும், மேய்ச்சல் நிலங்களில் இருந்தும் வெகு தொலைவில் தனது குட்டிகளை வைத்துப் பாதுகாக்கும். அந்த மாதிரி பெண் ஓநாய்கள், தங்கள் குட்டிகளை விட்டு விட்டு வேட்டைக்காக வெகு தூரம் செல்ல முடியாது. அதே சமயம் உணவின் இருப்பும் உறுதி செய்யப் பட வேண்டும். எனவே அவைகளின் தேர்வே மர்மோட்டுக்களின் வங்குகள் இருக்கும் பகுதியாகத்தான் இருக்கும்

மர்மோட்டுக்கள் பனிக்காலத்தில் ஆறுமாத கால நீண்ட உறக்கத்திற்குப் போய்விடுவன. அவைகளின் உடலில் சேகரித்து வைத்துள்ள கொழுப்புச் சத்தே அவை தங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளப் போதுமானது. பனிக்காலத்தில் மர்மோட்டுகளோடு அவற்றின் வங்குகளுக்குள் சென்று பதுங்கி அவற்றின் ரத்தையே உணவாக உறிஞ்சி உயிர் வாழும் கொசுக்கள் கோடை காலத்தில் வெளியே வந்து நீர் நிலைகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொறித்து பல்கிப் பெரும். சீனாவில் இருக்கும் கொசுக்கடியை விட பலமடங்கு வலி மிகுந்தது 'உலான்புலாக்' கொசுக்களின் தாக்குதல். கால்நடைகளின், நாய்களின் மற்றும் மனிதர்களின் உயிரை உலுக்கும் தாக்குதல். எனவே மர்மோட்டுகளின் எண்ணிக்கை குறைந்தால் நேர்விகிதத்தில் கொசுக்களின் எண்ணிக்கையும் குறையும். இல்லையென்றால் கோடை காலத்தில் கொசுக்கடியிலேயே வதைபட்டுச் சாக வேண்டியது தான். இதற்காக மட்டுமே ஓநாய்களுக்கு மங்கோலியர்கள் கோவில் கட்டிக் கும்பிட வேண்டும்.   

ஆனால் மர்மோட்டுக்களைப் போலன்றி எலிகள் ஆறு மாத கடுமையான பனிக்காலத்திற்குத் தேவையான நல்ல சத்துள்ள புற்களை, விதைகளோடு சேகரித்து தங்கள் வளைகளில் பதுக்கி வைத்துக் கொள்ளும். இப்படிப் பட்ட எலிகளை ஓநாய்கள் வேட்டையாடாவிட்டால் அவைகளின் எண்ணிக்கை மளமளவென பெருத்து புல்வெளியின் பெரும் பகுதி அவைகளாலேயே கபளீகரம் செய்யப் பட்டு விடும்

மேலும் அணில்கள், முயல்கள், மற்றும் எலிகள் தோண்டும் மிக நீண்ட, ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த வளைகளாலும் புல்வெளி நிலம் பெரும் பாதிப்புக்குள்ளாகும். இப்படி ஓநாய்கள் இல்லையென்றால் நான்கு மிகப் பெரும் நாசகாரிகளான மான்கள், மர்மோட்டுக்கள், முயல்கள் மற்றும் எலிகளிடமிருந்து இந்தப் பரந்த, அழகிய ஸ்டெப்பி புல்வெளிகளை யாராலும் காக்க முடியாது.

மனிதர்களின் கட்டுப்பாட்டில் வளர்க்கப் படுபவையாகவே இருந்தாலும் மங்கோலியக் குதிரைகளும், புல்வெளியின் இருப்பியலுக்குப் பெரும் அச்சுறுத்தலே. ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குட்டிகளில் கணிசமான அளவு ஓநாய்களால் வேட்டையாடப் படுவதாலேயே அவற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் வைக்கப் படுகிறது. எண்ணிக்கை மட்டுமின்றி மங்கோலியக் குதிரைகளின் வீரியத்திற்கும் ஓநாய்களே காரணம். 

அரேபியக் குதிரைகளை விடக் குட்டையாகவும், பருமன் அதிகமாகவும் உள்ள மங்கோலியக் குதிரைகள் உலகின் தலைசிறந்த போர்க்குதிரைகளாகத் திகழ ஓநாய்களால் அவைகளுக்கு எப்பொழுதும் இருக்கும் ஆபத்தே காரணம். லாயங்களில் அடைக்கப் பட்டு, தீவனம் கொடுத்து பாதுகாப்பாக வளர்க்கப் படும் குதிரைகள் ஒருக்காலும் கிட்டத்தட்ட காட்டுக் குதிரைகளுக்கிணையாக, எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற எச்சரிக்கை உணர்வோடும், தாக்குதல் நேரங்களில் உயிரைக் காக்க வெறித்ததனமாக ஓட வேண்டும் என்ற உந்துதலோடும் வளரும் மங்கோலியக் குதிரைகளோடு போட்டி போட முடியுமா? அது மட்டுமில்லாமல் ஓடிக்கொண்டே ஓநாய்களை எதிர்த்துப் போராடும் தீரமும் இயல்பிலேயே வளர்த்தெடுக்கப் பட்டு அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தும் மங்கோலியக் குதிரைகளின் வீரியத்துக்கு ஓநாய்கள்தான் காரணம் என்றால் மிகையாகா தல்லவா? முகம் கூடப் பார்க்காமல் இணை சேரும் லாயக் குதிரைகளைப் போலல்லாமல், இணை சேருவதற்காக மங்கோலிய ஆண் குதிரைகளிடையே நடக்கும் கொலை வெறி யுத்தம் நூலின் அற்புதமான பகுதிகளில் ஒன்று.

 எப்படித தங்கள் கால்நடைகளையும், தங்கள் உயிரையும் ஓநாய்களிடம் இருந்து காக்கும நாய்களின் இறைச்சியை உண்பதில்லைய அத போ உலான புலாக் பல்லுயிர்ச்சூழலின் அச்சாணியாக இருக்கும ஓநாய்களின் இறைச்சியை மங்கோலியர்கள் உண்பதில்லை. இத ஓநாய்கள மீது மங்கோலியர்கள் வைத்திருக்கும் அபரிமிதமான மரியாதையையும், அவைகளிடத்தே அவர்களுக்கிருக்கும் நன்றியுணர்ச்சியையும் காட்டுகிறது. 

இது போன்று இந்தப் பல்லுயிர்ச் சூழலைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த நாவலில் இன்னும் எராளமான தகவல்கள் இருக்கின்றன. 

நாவலின் கதை:

இந்த நாவலிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை விரிவாகப் பார்த்து விட்டதால் கதையையாவது சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன். 

பல லட்சக்கணக்கான சீன மக்கள் உண்ண உணவின்றி, பஞ்சத்தில் செத்து மடிந்து கொண்டிருக்கும் பொழுது, நல்ல மண்வளமும், நீர்வளமும் கொண்டது பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களை, ஆயிரத்திற்கும் குறைவான மங்கோலியர்கள் மேய்ச்சல் நிலங்களாக உபயோகிப்பது எவ்வளவு பெரிய மூடத்தனம்? நவீன இயந்திரங்களையும், நீர்ப்பாசன முறைகளையும், விவசாய உத்திகளையும் பயன் படுத்தி இந்த மேய்ச்சல் நிலங்களை விளை நிலங்களாக மாற்றினால் எவ்வளவு உணவு உற்பத்தியைப் பெருக்க முடியும் என்னும் வாதத்தின் அடிப்படையில் சீனக் கம்யூனிச அரசு முதலில் மங்கோலியர்கள் வாழ்க்கை முறையை அறிந்து கொள்வதற்கும், இன்னர் மங்கோலிய ஸ்டெப்பி புல்வெளி நிலங்களை சர்வே செய்வதற்கும் மாணவர்களை அனுப்புகிறது. 

அப்படி வரக்கூடிய மாணவர்களில் ஒருவரான சென் செங் வாசிப்பிலும், புதிய விஷயங்களை திறந்த மனதோடு கற்றுக் கொள்வதிலும் உள்ள ஆர்வத்தின் காரணமாக முதியவர் பில்ஜீ யின் வழிகாட்டுதலினால் ஓநாய்களின் முக்கியத்துவத்தை மெல்ல மெல்லப் புரிந்து கொள்கிறான். 

இப்படிப்பட்ட ஓநாய்களைப் பற்றிய புதிய புதிய தகவல்களை மேலும் மேலும் அறிய சென் செங் தன்னையும் அறியாமல் அவற்றை நேசிக்கத் தொடங்குகிறான். அவற்றின் மீதான அவனுடைய ஆர்வம் கட்டுக்கடங்காமல் போகிறது. அதாவது ஒரு ஓநாய்க் குட்டியை அதன் தாயிடம் இருந்து திருடி வந்து தனது செல்லப் பிராணியாக வளர்க்கும் அளவிற்கு அவன் ஆர்வம் தறி கெட்டுப் போகிறது. ஒரு ஓநாய்க் குட்டியை வளர்ப்பதில் உள்ள சவால்களும், அபாயங்களும், சுவராஸ்யங்களும் மிக விரிவாக நாவலின் குறிப்பிடத்தகுந்த பக்கங்களை ஒதுக்கி விவரிக்கப் பட்டுள்ளது, 

இப்படியெல்லாம் உண்மையில் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்னும் சந்தேகம் எழுந்தாலும், ஆசிரியர் உண்மையாகவே ஒரு ஒநாய்க் குட்டியை எடுத்து வளர்த்திருந்தாலொழிய இவ்வளவு நுணுக்கமான விவரணைகளை எழுதியிருக்க முடியாது என்றே என் மனதிற்குப் படுகிறது. இல்லை அவருடைய கற்ப்னைத் திறன் மனித சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக வேட்டைக் காட்சிகள் மயிர்கூச்செரியச் செய்பவை

முதல் வேட்டையே சும்மா அதகளம் தான். சுமார் ஆயிரம் மான்களை மூன்று பக்கங்களில் இருந்தும் ஒரு சிறு ஓநாய் கூட்டம் சுற்றி வளைத்து விரட்டிச் சென்று பனிப் புதைகுழிக்குள் சமாதி செய்யும் காட்சியைக் கண்ட சென், ஓநாய்களின் புத்திக்கூர்மையையும், கூட்டா

2 வாசிப்புகள்
பகிர்: 0 பகிர்வுகள்

கருத்துகள் (0)

இன்னும் கருத்துகள் எதுவும் இல்லை. முதல் கருத்தை எழுதவும்!