காடும், வீடும், கனவும்!!!

I
Ilango Ramasamy
காடும், வீடும், கனவும்!!!

கடந்த இரண்டு வருடங்களாக மைத்துனர் ஷார்ஜாவில் Al Jada by Arada என்ற மிகப்பெரிய வளாகத்தில் உள்ள அடுக்ககமொன்றில் ஒரு சிறு வீட்டில் வசித்து வருகிறார். மொட்டைப் பாலை நிலத்தில் பல்லாயிரக் கணக்கான மரங்களை வைத்து வளர்த்துள்ளது மட்டுமின்றி ஒரு தூசு தும்பின்றிப் பராமரிக்கப்படும் செல்வம் புரளும் பகுதியது

கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்றிருந்த போது அவர்கள் அந்த மரங்களை எப்படி விதை போட்ட நாள் முதல், கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாத்து வளர்க்கின்றனர் என்பதை ஒரு சிற்றுலாவாகச் சென்று கண்டு வியந்தோம். அப்பொழுதே அதே நிறுவனத்தினருடைய Masaar என்ற மற்றொரு குடியிருப்பு வளாகத்தைக் காண வேண்டும் என்ற ஆசை பற்றிக் கொண்டது. Al Jada எப்பொழுதும் பொது மக்கள் நடமாட்டத்தில் ஜே ஜே வென இருக்கும். அங்கு ஏராளமான விதவிதமான பன்னாட்டு உணவகங்களும் காஃபி ஷாட்களும் உண்டு. அடுக்கங்களுக்கு இடையிடையே இருக்கும் பூங்காக்களில் மாலை வேளைகளில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பர். மக்கள் காலார நடை பழகுவர். அதே போன்ற தொரு மகிழ்வான சூழ்நிலையை எதிர் பார்த்தே Masaar ஐச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்

மறுநாள் மாலை Masaar க்குள் நுழைந்ந்த எங்கள் வண்டியைத் தடுத்து நிறுத்திய காவலர் வெளியாட்களுக்கு அனுமதியில்லை எனக் கூற "யப்பா எங்களுக்கு வீடு வாங்கலாம்னு ஒரு யோசன. சுத்திப் பாக்காம எப்படி வாங்க? என அடித்து விட்டோம். க

"சேல்ஸ் ஆஃபீஸ் என்ட்ரன்ஸ் அடுத்து கேட் சார் இன்னும் கொஞ்சம் மேல போய் வலது புறம் திரும்புங்க" என வழிகாட்டினார். இந்த ப்ராஜெக்ட்டில் மொத்தம் 3500 தனித் தனி வீடுகள். மன்னிக்கவும் பெரிய பெரிய பங்களாக்கள். வீட்டின் புற வாசல் வழி வெளியேறினால் அடர் காட்டிற்குள் நுழைவதைப் போன்ற உணர்வு எழும் வண்ணம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் அங்கு நெடிந்துயர்ந்து வளர்ந்து நிழல் தந்து கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் கேள்விப்பட்டதால் எழுந்த ஆர்வத்தால் தான் அங்கு சென்றோம்

காவலாளி காட்டிய வழியில் சென்று விற்பனை அலுவலகத்தை அடைந்தோம். வாகனங்கள் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தன. மேலும் மேலும் திருவிழாவிற்கு வருவது போல வித விதமான சொகுசுக் கார்களில் பணக்களை சொட்டும் கனவான்களும், சீமாட்டிகளும் காத்தில் நறுமணத்தைப் பரவ விட்டுக் கொண்டு மிடுக்காக நடை போட்டுக் கொண்டிருந்தனர். 

அங்கிருந்த காவலாளிகளிடம் விசாரித்தோம். Masaar I ல் அனைத்து வீடுகளும் விற்றுத் தீர்ந்து மக்கள் குடியேறி விட்டதாகவும் அது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட Gated Community யாதலால் வெளியார் எவரும் உள்ளே அனுமதிக்கப் படுவதில்லை என்றும் தெரிவித்தனர். நியாயந்தான் என நினைத்துக் கொண்டே சரி இவ்வளவு தூரம் வந்து விட்டோம் அந்த Sales office ஐ யாவது பார்த்து விட்டுச் செல்வோம் என முடிவு செய்தோம்

வாகனத்தை Valet பார்க்கிங்கில் விட்டு விட்டு அந்த ப்ரம்மாண்டமான விற்பனை அலுவலகத்தினுள் நுழைந்தோம். வரவேற்பு மேசையில் இருந்த இரு பெண்களும் பர பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சூழலைக் கண்டவுடனேயே எனது மனம் சுருங்கி விட்டது. "இவனுங்க நம்மள இந்த office க்குள்ள விடடதே பெருசு, கம்முனு கெளம்பலாம் கணேஷு" எனச் சொல்ல வாயெடுப்பதற்குள் மைத்துனர் மிகவும் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு வீடுகளுக்கான விலையை விசாரிக்கத் துவங்கி விட்டார். 

"ரைட்டு இது வேலைக்காகாது" என நான் அப்படியே அலுங்காமல் அந்த இடத்தை விட்டு அகன்று அங்கு காட்சிப் படுத்தப் பட்டிருந்த பெரும் மாதிரிகளை வேடிக்கை பார்க்கத் துவங்கினேன். ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வருவதற்குள் எங்களுக்காக ஒரு ப்ரத்யேக விற்பனை பிரதிநிதி அமர்த்தப்பட்டிருந்தார்.

 லூஸ ஹேர், ஸ்லீவ் லெஸ ப்ளவுஸ், வலது கை மணிக்கட்டில் ஐந்தாறு வெள்ளை மற்றும மஞ்சள நி தங்க ப்ரேஸ்லெட்டுகள், இடது மணிக்கட்டில் ரோலக்ஸ், கண்ண உறுத்தாத லிப்ஸ்டிக், மிக நேர்த்தியாகப் பராமரிக்கப் பட்ட மினு மினுத்த விரல நகங்கள். அவற்றில் ஏழெட்டு மெல்லிய மோதிரங்கள். நீல நிறத்தில் வெள்ளை வரியோடி டிசைனர் முழுக்கால் சட்டை, ஹை ஹீல்ஸ காலணின அசத்தலான ஆடை அலங்காரத்தில மிடுக்குடனும், தோரணையுடனும் உரை யாடிக் கொண்டிருந்தார். 

முன் நெற்றியில் புரண்டு விழுந்த தங்க நிறக் கேசக் கற்றைகளை மிகவும் ஒயிலாக ஒதுக்கி விட்ட வாறே கணேஷின் கேள்விகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தார்

புவனாவும் ஆதிரையும் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். நான் அருகே சென்றதும் கணேஷ் என்னை அப்பெண்மணிக்கு அறிமுகப் படுத்தினார். நானும் தொஞ்சம் கூடத் தயங்காமல் சம்பிரதாயமாகக் கை குலுக்கி அவருடைய கண்களைப் பார்த்து "ஹாய்" சொன்னேன். கணேஷ் உரையாடலைத் தொடர்ந்தார். 

 Masaar I மற்றும் II ல் அனைத்த வீடுகளும் விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் Masaar III க்குத தற்போது விற்பனை நடை பெறுவதாகவும் அப்பெண்மணி தெரிவித்தார். இப்போது முதல் தவணையைச் செலுத்தினால் 2029 ஆம ஆண்ட ஜுன மாதத்தில் குடியேறலாம் என்றும முதல தவணையாக 10 சதவிகதப பணத்தைக கட் வேண்டும மீதி 25 சதவிகித முன பணத்தை 5 தவணைகளாக ஆற மாத இடைவெளிகளில் கட் வேண்டும என்றும் அடுக்கிக் கொண்ட சென்றார். 

அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த எனக்குத் தொடர்ந்து கணேஷ் மட்டுமே உரையாடிக் கொண்டிருந்தால் நன்றாக இருக்காதெனத் தோன்றியதால் நானும் "இந்தப் போரின் காரணமாக விலை வீழ்ச்சி ஏதும் இருக்கிறதா? " எனக் கேட்டுக் கோதாவில் குதித்தேன்.  

"எங்களுக்கு ஆக்சுவலி டிமாண்ட் கூடியிருக்கு, இப்ப விலை குறைவா கெடைக்கும், இது இன்வெஸ்ட் பண்ண நல்ல டைம்னு வழக்கத்த விட நெறைய என்கொயரி வருது. நீங்களே பார்க்கறீங்க இல்ல? எவ்ளோ பேரு வர்றாங்க பாருங்க …. ஆனா ஜூன் 26 க்குள்ள புக் பண்ணீங்ன்னா SLD DLD எங்களது" என்றார்

"Sorry what's that I don't get you" என்றேன்

அவர் முகம் சுருங்கியது. 

"ச்சை அவசரப் பட்டு ஸ்லிப்பாகிட்டியேடா" என மனதுக்குள் என்னை நான் கடிந்து கொண்டேன். அவருக்கு, “இவனுக்கு இது கூட தெரியல இவன் எங்க வீடு வாங்கப் போறான்? ” என்ற எண்ணம் தோன்றியிருந்திருக்க வேண்டும். ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது சட்டென இயல்பு நிலைக்குத் திரும்பியவர் அது பதிவுக் கட்டணம் என்றும் சொத்து மதிப்பில் 5% வரும் எனவும் விளக்கினார். 

இதற்கு மேல் கவனமாக உரையாட வேண்டுமடாஇனா ரானாஎனச் சொல்லிக் கொண்டேன். நானும் கணேஷூம் மிகவும் சீரியஸான குரலில் அடுத்தடுத்த கேள்விகளை அடுக்கினோம். எங்கள் இருவருக்கும் இருந்த விவரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வமே அத்தகைய இயல்பான கேள்விகளாக உருமாறி அடுத்தடுத்து வந்து விழுந்தன

ஒரு கட்டத்தில் அந்த விற்பனைப் பிரதிநிதியே நீங்கள் ஏன் எங்களது மாதிரி வீட்டை ஒரு எட்டு வந்து பார்க்கக் கூடாது? எனக் கேட்க வேண்டும் என்பதே எங்களது ஆழ்மன விருப்பமாக இருந்திருக்க வேண்டும்

ஆனால் விடாக் கொண்டனுக்கு கொடாக் கண்டனாய் அந்தப் பெண்மணியும் ஆட்டம் கட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த நான், "வெறும் வரைபடங்களையும், பொம்மை மாதிரிகளையும் மட்டும் பார்த்து விட்டு எப்படி இத்தனை கோடிகளை இறக்க முடியும்? எங்களைப் போல விவரம் தேடி வருவோருக்குச் சுற்றிக் காட்டுவதற்காக உங்களிடம் ஒரு மாதிரி வீடு கூடவா இல்லை? ” என்றேன்

ஒரே ஒரு 5 BHK இருக்கிறது. பார்க்க விரும்பினால் அழைத்துச் செல்கிறேன்என்றார்.  

“இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா” என்று மனம் குதியாட்டம் போட்டாலும் மகிழ்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல் "உங்களுக்கு ஒன்றும் சிரமம் இல்லையெனில் நாங்கள் அதனை வரவேற்கிறோம்” எனக் கெத்தாகக் கூற எங்களை அழைத்துச் செல்ல ஒரு பக்கியை அழைத்தார். பக்கி நம்மைப்போன்றொன்றல்ல, அது கால்ஃப் மைதானங்களில் பயன்படுத்தப் படும் மின்கல ஊர்தியான Buggy. 

வண்டியில் எங்களை ஏற்றிக் கொண்டவர் விவரங்களை அடுக்கிக் கொண்டே சென்றார். பாலைவனக் கோடையின் சூரியக் கிரணங்கள் உள் நுழைய முடியாத அடர் வனத்தினுள் வண்டி நுழைந்தது. 13 கி. மீ சுற்றளவு கொண்ட மிதிவண்டிப் பாதையாம். செயற்கை வனத்தினுள்ளே வளைந்து நெளிந்து சென்ற அப்பாதையின் இரு புறங்களிலும் வரிசையாக வீடுகள். அவ்வீடுகளின் கொல்லைப் புறத்தில் தான் எங்கள் வண்டி ஊர்ந்து கொண்டிருந்தது. வண்டி ஒரு சிறு சந்துக்குள் நுழைந்து எதிரெதிரே முகம் பார்த்து அமர்ந்திருக்கும் வீடுகளின் முன் வாசல் வழி ஊர்ந்து ஒரு பெரிய பங்களாவின் முன் நிறுத்தத்திற்கு வந்தது

அடுத்த அரை மணி நேரம் நீச்சல் குளத்துடன் மூன்று தளங்களில் அமைதியாக, பிரம்மாண்டமாக, பெரும் கண்ணாடி முகப்புகளுடனும் எளிய உள் அலங்காரங்களுடனும் அமைந்திருந்த அந்த நவீன இல்லத்தைச் சுற்றிக் காட்டி அதன் வசதிகளை எங்களுக்கு விளக்கினார். கீழே இறங்கும் போது புவனாவையும், ஆதிரையையும் மின் தூக்கியில் அழைத்து வந்தார்

இறுக்கம் தளர்ந்து அவர்கள் பங்கிற்கு அவர்களும் கேள்விகளைக் கேட்கத் துவங்கியிருந்தனர். நாங்கள் உள்ளே நுழைந்த போது ஏற்கனவே இரண்டு அணிகள் அவ்வீட்டைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தன. வெளியேறுவதற்குள் மேலும் இரண்டு அணியினர் வந்து சேர்ந்து கொண்டனர்

எங்களுடன் தனது 8 வயது மகனையும் அழைத்து வந்திருந்த நண்பர் செந்தில் முழு வீட்டையும் காணொளியாகப் பதிவு செய்து கொண்டிருந்தார். வீட்டை விட்டு வெளியேறும் போது அந்தப் பெண் பிரதிநிதி, “இங்கு படம் பிடிக்க அனுமதி இல்லை. ஆனால் நான் நீங்கள் படம் பிடித்ததை நான் பார்க்க வில்லையென நினைத்துக் கொள்ளுங்கள்” என்று ஏதோ எங்களுக்கு ஒரு பெரும் உபகாரம் செய்ததாகக் காட்டிக் கொண்டார். மரியா என்ற அந்தப் பெண் துனிசிய நாட்டுக் காரர். 

நாங்கள் திரும்பச் செல்லும் வழியில் ஒரு வடக்கிந்தியக் குடும்பம் வியர்க்க விறு விறுக்க நடந்து கொண்டிருந்தது. மரியா, "யார் இவர்கள்? ஏன் இப்படி இந்த வெப்பத்தில் நடந்து செல்கின்றனர்? ” எனப் புலம்பிக் கொண்டே யாருக்கோ அலைபேசியில் அழைத்து நிலவரத்தைச் சொல்லி ஒரு வண்டியை அனுப்பி அவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்ய முனைந்தார். அதற்குள் அவர்களை அழைத்து வந்திருந்த விற்பனைப் பிரதிநிதி சற்று முன்னே மூச்சிரைக்க நடந்து கொண்டிருப்பதைக் கண்டோம். அந்தப் பெண்மணியும் ஒரு இந்தியரே. அந்தக் குடும்பம் தங்களுக்கு Buggy வேண்டாம் என மறுத்திருக்க வேண்டும்

மீண்டும் அந்த ப்ரம்மாண்டமான விற்பனை அலுவலகத்திற்குள் நுழைந்தோம். “ஒரு தனியறைக்குள் சென்று அமர்ந்து பேசலாமா? ” எனக் கேட்டு எங்களை அழைத்துச் சென்று அமர வைத்தார். உள்ளே ஒரு காஃபி பூத் இருந்தது. அங்கு பானங்கள் தயாரித்து விருந்தினர்களை உபசரித்துக் கொண்டிருந்த இளைஞர் எங்களை நோக்கி வந்து பருக என்ன விரும்புகிறீர்கள் என்றார்

நானும் கணேஷூம், செந்திலும் ஆளுக்கொரு ஐஸ் காஃபி சொன்னோம். பொடியன் ஒரு ஹாட் சாக்லேட் வேண்டுமென்றான். ஆதிரை கூச்சப் பட்டுக் கொண்டு எனக்கு எதுவும் வேண்டாம் என மறுத்தாள். இத்தனைக்கும் அவளுக்குக் கோல்ட் காஃபி குடிக்கப் பிடிக்கும் "டேய் இங்கல்லாம் இப்படி வேண்டாம்னு சொல்லக் கூடாது. கொறைஞ்சது தண்ணியாவது கேட்டு வாங்கு. குடிக்க முடியாட்டி கூட பரவால்ல” என அறிவுறுத்தினேன். 

அவள் "ஜஸ்ட் வாட்டர் ப்ளீஸ்” என்பதற்கும் கழிப்பிடத்திற்குச் சென்றிருந்த புவனா வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது. புவனாவுக்குமொரு காபி சொன்னோம். 

சில்லெனக் காபி கோப்பைகள் வர அதனை சிப்பிக் கொண்டே மேற்கொண்டு பேசலாமா என ஆரம்பித்து அடுத்த சுற்றுச் சந்தேகங்களைக் கேட்டோம்

துபயில் இருந்து இவ்வளவு தூரம் வர வேண்டியிருப்பது கூடப் பரவாயில்லை ஆனால் போக்குவரத்து நெரிசலை நினைக்கத் தான் மலைப்பாயிருக்கிறது; எத்தனை தவணைகள்; இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் சேர்ந்து கூட்டாக வாங்கலாமா? கடன் வசதிகள் எப்படி? வாடகைக்கு விட முடியுமா? லாபம் வந்தால் விற்க முடியுமா? எவ்வளவு வாடகை கிடைக்கிறது? etc. etc …. என அடுத்த அரை மணி நேரம் ஓடியது

நான் பேசிப் பேசிக் களைத்து விட்டேன். இந்தம்மாவிடம் இருந்து எப்படி கழற்றிக் கொண்டு போவது என உள்ளுக்குள் உதறலெடுக்க ஆரம்பித்தது. ஆனால் கணேஷோ அடுத்தடுத்த கேள்விகளை விசிறிக் கொண்டே இருந்தார். எனக்கு ஏதோ ஒரு புதை குழிக்குள் விழுந்து மூழ்கி மூச்சு விட முடியாமல் திணறுவதைப் போலிருந்தது. பெரியவர் ராமசாமி வேறு மனக்கண்ணில் தோன்றி "ஒரு பொய்ய மறைக்க ஒம்போது பொய் சொல்லிக் கிட்டிருக்கீங்க” எனக் கடுகடுத்தார்.  

ஆனால் கணேஷ் விடுவதாயில்லை, “எந்த நாட்டினர் இங்கே அதிகம் முதலீடு செய்கின்றனர்” என அடுத்த கேள்வியை இறக்கினார். 

“இந்தியர்கள்கள்” தான் எனச் சொல்லிய மரியா திடீரென நினைவு வந்தவராக "உங்களுக்கு வாஸ்து பார்க்க வேண்டாமா? ” என்றார்

நாங்கள் அனைவரும் கோரஸாக, “எதே வாஸ்துவா? ” என்றோம் 

"ஆமாம் இங்கே வீடு வாங்கும் பெரும்பாலான இந்தியர்கள் முதன் முதலில் நோக்கும் அம்சம் வீடு வாஸ்து படி இருக்கிறதா? எந்தத் திசை பார்த்து இருக்கிறது? வீட்டு எண்ணின் கூட்டுத் தொகை எத்தனை? எனப் பல கேள்விகளைக் கேட்பர். சமையலறையை அங்கே மாற்று படுக்கையறையை இங்கே கொண்டு போ, பூஜை அறை வேண்டும், வெளியே துளசி மாடம் வேண்டும் என பல வேண்டுதல்களை முன்வைப்பர் அத்தனையையும் செய்து கொடுத்த பிறகு அவர்களது குருஜியை இந்தியாவில் இருந்து இதற்காகவே அனுப்பி வைப்பர். அவர் வந்து கடைசி நேரத்தில் இல்லை இது உங்களுக்கு ஒத்து வராது எனக் கூறினால் அது எவ்வளவு பெரிய நட்டம் என்றாலும் கவலையே படாமல் வீட்டைக் கைவிட்டு விட்டுக் கிளம்பி விடுவர்” என நம்மக்களின் பெருமைகளை விதந்தோதத் துவங்கி விட்டார். 

எப்டியாவது பிய்த்துக் கொண்டு கிளம்பினால் போதும் என தடுமாறிக் கொண்டிருந்தவனிடம் அவரே, "எப்ப புக் பண்லாம். அடுத்த ப்ராஸஸ ஆரம்பிக்கலாமா? ” என்றார்

அவ்வளவு நேர உரையாடலில் நாங்கள் ஓமானில் இருந்து வந்திருக்கிறோம் என்பதை அறிந்த பிறகு எங்களுக்கு வீடு வாங்கத்தான் மைத்துனர் எங்களை அங்கு அழைத்து வந்திருப்பதாக முடிவு செய்து விட்டார் போலும். அதனால் என்னிடம் தான் கொக்கியைப் போட்டார். ஆத்தி நான்லாம் இந்த வீட்டு வாசப்படிய மிதிக்கக் கூட வொர்த் இல்லீங்கம்மணி என மனம் தந்தியடிக்க நான் எனது உதறலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் 

“ ஹா, இது மிகப்பெரிய முதலீடல்லவா? நாங்கள் பல்வேறு இடங்களைப் பார்த்து ஆராய்ந்து வருகிறோம். இந்த ப்ராஜெக்ட் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் நாங்கள் உடனே முடிவெடுக்க முடியாது. வீட்டில் அப்பா அம்மாவிடம் கலந்து பேச வேண்டும். நாங்க போய் பேசிட்டு சொல்றோமே? ” என்றேன்

"ஓ ஷ்யூர்” என்றவர் “உங்க காண்டாக்ட் நம்பர் சொல்லுங்களேன்” எனக் கேட்டு வாங்கிக் கொண்டு “ ஜுன் எண்ட்டுக்குள்ள ப்ளாக் பண்ணிடுங்க இல்லன்னா 1 st July ல இருந்து SLD DLD உங்களுக்கு 50% தான் கிடைக்கும்” என்றார். 

“அதையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் இப்ப ரொம்ப டயர்டா இருக்கு நாங்க கெளம்பவா? ” என்று எழுந்தேன். எங்களை வழியனுப்ப அவரும் உடன் வந்தார். இயற்கை அழைக்க நான் ஒதுங்கிடம் சென்று திரும்புகிறேன் எனக் கூறி நகர்ந்தேன். 

திரும்ப வந்த போது அண்ணனும் தங்கையும் மிக சுவராஸ்யமாக மரியாவிடம் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். நான் அவர்களை அடைந்தவுடன் சோனியா எங்களிடம்

“அருகிலேயே ஒரு 6 படுக்கை அறை கொண்ட மாதிரி வில்லா இருக்கிறது. அது Masaar I ல் இருந்தும் மேம்பட்ட தரம் உடையது. அதனை ஒரு முறை பார்த்து விடுங்களேன் என அழைத்தார்

"இதேதடா வம்பாப் போச்சு, நாம உட்ட பீலாவுல நாம நெஜமாவே வீடு வாங்க வந்த பார்ட்டிக தான்னு இந்தம்மா நம்பிட்டாங்க போலயேஎன நெஞ்சு பட படத்தது. கணேஷூக்கோ அந்த வீட்டையும் அதில் இருக்கும் வித்தியாசங்களையும் பார்க்கும் ஆர்வம் பொங்க மனிதர் உற்சாகமடைந்து விட்டார்.

அந்த ஆறு படுக்கையறை வில்லாவும் முன்பு பார்த்த வீட்டைப் போலவே தான் இருந்தது. Sales office ல் இருந்து கூப்பிடு தூரத்தில் இருந்த அந்த பங்களாவிற்குள் நுழைந்தவுடன் சோனியா எங்களை அவருடைய மேலதிகாரிக்கு இவர்கள் ஓமானில் இருந்து வந்திருக்கின்றனர் எனக் கூறி அறிமுகப் படுத்தினார். அவரும் முகமலர்ந்து “வருக வருக, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று வரவேற்று எங்களை உணவருந்த அழைத்துச் செல்லுமாறு சோனியாவைக் கேட்டுக் கொண்டார். 

முகத்திலும் உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் பணக்களை தாண்டவமாடிய வடக்கிந்தியப் பெண்மணியொருவர் நீச்சல் குளத்திற்கு முன் நின்று நீட்டி நெளித்து போஸ் கொடுக்க அவருடைய பதின் வயது மகன் படங்களாகச் சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்

வீட்டிற்குள் நுழைந்து டைனிங் ஹாலை அடைந்தவுடன் அங்கிருந்த ஐந்து நட்சத்திர விருந்தைச் சுட்டிக் காட்டி, "ப்ளீஸ் ஹேவ் சம் ஃபுட்என்றார். ஏகப்பட்ட பேஸ்ட்ரி வகைகள். நாக்கில் எச்சில் ஊறியது. கை பரபரத்தது. ஆனால் மனமோஅடங்கு, அடங்குஎன அதட்டியது. அரும்பாடு பட்டு ஆசையை அடக்கிக் கொண்டு "நோ தேங்ஸ் ஐயம் லோடட்என வயிற்றை நீவிக் காட்டிய வாறே வீட்டைச் சுற்றிப் பார்ப்பதில் பெருத்த ஆர்வம் காட்டினேன். அந்தச் சாப்பாடெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லையாம். “தேர்ந்த நடிகனடா நீ” என எனக்கு நானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டேன்.

உள்ளே சமையலறையில் பந்தாவாக கோட் சூட் போட்ட வெள்ளைத் தோல் கொண்ட வடக்கிந்திய ஆடவர் மூவர் பெரும் தோரணையுடன் சத்தமாக உரையாடிக் கொண்டே சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களுக்கு ஒரு ஹலோ சொல்லி விட்டு வேலைக்காரர் தங்கும் அறையைப் பார்த்த பின் முதல் மாடிக்குப் படியேறினோம். 

இந்தப் பெரிய வீட்டின் படிக்கட்டு சற்றே அகலம் அதிகம். ஸ்விட்சுகள் அனைத்தும் ஸ்மார்ட் கன்ட்ரோல். அலை பேசியுடன் இணைக்கப்பட்டு கட்டுபடுத்தக் கூடிய நவீன தொழில் நுட்பம். பெரிதாக வேறு எந்த வித்தியாசமும் கிடையாது. 

நாங்கள் கீழே இறங்கி வந்த போது செந்திலும் ஜூனியரும் சமயலறைக்குள் கையில் ஆளுக் கொரு தட்டு நிறைய அடுக்கிய வண்ண வண்ண ஸ்னாக்குகளை சின்னா பின்னப் படுத்திக் கொண்டிருந்தனர். நீங்களாவது சாப்ட்டீங்களே அதுவே சந்தோஷம் என நினைத்துக் கொண்டே வெளிப்புறம் சென்று மிச்ச மீதி சந்தேகங்களைக் கேட்டு உரையாடிக் கொண்டிருத்தோம்.

சில நிமிடங்களில் அவர்களும் வந்து சேர்ந்து கொள்ள வீட்டின் வரைபடம், கட்டண விவரங்கள், தவணை முறை என அனைத்துத் தகவல்களையும் வாட்ஸ் அப்பிற்கு அனுப்புங்கள் எனக் கூறி மரியாவிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டோம்

அன்று மாலையே அனைத்துத் தகவல்களும் வாட்ஸ் அப்பிற்கு வந்து சேர்ந்தன. அந்த மிகப்பெரிய வீடு கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய். 5.3 million AED பெரும் 5000 சதுர அடி மனையில் 4000 சதுர அடி பரப்பளவில் கட்டப் பட்டுள்ள ஒரு மிகச் சாதாரணமான வீட்டிற்கு இத்தனை விலை

வெறும் பாலை நிலம். அதில் காடு போல் மரம் வளர்த்து, பெரும் பணம் படைத்தவர்களை ஈர்த்து மதிப்புக் கூட்டி விற்கும் வியாபார யுக்தி. இதனை Think Big என மிகப்பெரிய அளவில் சிந்தித்துச் செயல்படுத்தியிருக்கின்றனர். Masaar project ஒவ்வொன்றும் சற்றேறக் குறைய 450 ஏக்கர் பரப்பளவு. மொத்தம் சுமார் 10000 வீடுகள். Arada என்ற இந்த நிறுவனத்தின் முதலாளிகள் ஷார்ஜா இளவரசரும், சவுதி இளவரசரும். 

பசுமையான மரங்களைக் கண்டிராத அரபு தேசத்தவர் இந்த மரங்கள் அடர்ந்த சோலை போன்ற குடியிருப்பு வளாகங்களின் மீது மோகம் கொண்டு பெரும்பணத்தை இறைத்து முதலீடு செய்வதைக் கூடப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த இந்தியர்கள் எதற்கு அங்கு சென்று முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர் என்பது தான் விளங்க வில்லை? இது ஊதிப் பெருக்கப் பட்ட மதிப்பாகவே தோன்றுகிறது. எனது எண்ண ஓட்டம் இப்படி இருக்க 

மரியா, மறுநாள் காலை "முடிவெடுத்து விட்டீர்களா? ” எனக் கேட்டு செய்தியனுப்பினார். 

சம்பிரதாய நல விசாரிப்புகருக்குப் பிறகு “மரியா இன்னமும் நாங்கள் ஓமான் சென்று சேர வில்லை. இது மிகப் பெரிய முதலீடல்லவா? எங்களுக்கு யோசிக்க சற்று அவகாசம் வேண்டும். நானே உங்களைத் தொடர்பு கொள்கிறேன். நன்றிஎனப் பதிலளித்தேன்.

அவரும்உங்களுடைய நாள் நல்ல நாளாகட்டும்” என வாழ்த்தி விடை பெற்றுக் கொண்டார். இன்று வரை அவரிடம் இருந்து எந்த மீள் விசாரிப்போ, அழைப்போ, குறுஞ் செய்தியோ இல்லை. 

இன்று அவர்களுக்கு விடுமுறை நாள். நாளை நாங்கள் Masaar ல் இப்போதைக்கு முதலீடு செய்ய முடியாதென்பதை மிகவும் தன்மையாகக் கூறி அவருடைய வழிகாட்டுதல்களுக்கும் நேரத்திற்கும் நன்றி கூறும் மடலைத் தயார் செய்து வைத்திருக்கிறேன். அவர் என்னை மீண்டும் தொடர்புகொள்வதற்கு முன் நான் அதனை அவருக்கு அனுப்பி வைத்தால் மீண்டுமொருமுறை பொய் சொல்ல வேண்டியதைத் தவிர்க்கலாம். 

அவரிடம் பொய் சொன்ன குற்ற உணர்ச்சி ஒரு புறம் குத்தினாலும் இந்த நல்ல அனுபவத்தையும் கற்றலையும் நினைத்து மனம் மகிழ்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அப்பல்லோ ஃபார்மஸிக்குள் நுழைந்தால் ஆங்கிலத்தில் உரையாட வேண்டியிருக்குமோ எனப் பயந்து நடுங்கிய நான் எதிர்காலத்தில் அமீரகத்தில் பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள சொத்து வாங்குவதைப் பற்றிப் பல மணி நேரம் உரையாடும் நிலைக்கு வருவேன் எனக் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. 

ஆமீரகத்திலோ அல்லது ஓமானிலோ ஒரு சிறிய வீடு வாங்க வேண்டும் என்ற கனவை விதைத்து வைத்திருக்கிறேன். கனவு ஒரு நாள் நனவாகும் என ஆழ்மனம் உறுதியாக நம்புகிறது. அப்படி அது நிறைவேறாவிட்டால் கூட பரவாயில்லை எனது ஓய்வு காலத்தை பசுமையான மரங்கள் சூழ் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு சிறிய குடிசையையாவது கட்டிக் கொண்டு ஏகாந்தமாகக் கழிக்க வேண்டும் என்பது எனது நெடுங்காலக் கனவு. 

இந்த இடத்தில் இன்று ஆழ்மன நம்பிக்கைகளின் சக்தி குறித்து ஹரிஹர சுதன் தங்கவேலு எழுதிய பதிவு நினைவுக்கு வருகிறது. அதில் அவருடைய நேயர்களது அனுபவத்தைப் பின்னூட்டமிடச் சொல்லிக் கேட்டிருந்தார். என்னிடம் கடந்த கால அனுபவங்களாக ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. அதனைத் தனிப் பதிவாகத்தான் எழுத வேண்டும்

கதைப்போம் தொடர்ந்து கனவுகளை விதைப்போம்!!!!

4 வாசிப்புகள்
பகிர்: 0 பகிர்வுகள்

கருத்துகள் (0)

இன்னும் கருத்துகள் எதுவும் இல்லை. முதல் கருத்தை எழுதவும்!