"போர்" என்பதை ஏதோ பொங்கல் திருவிழாவில் சட்டி உடைக்கும் போட்டி என்பதாகக் கற்பனை செய்து கொண்டு உற்சாகக் குக்குரல் எழுப்பும் அறிவாளிகள் எவருக்கும் "இந்தியாவின் ஐந்து போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளோம்" என்ற பாகிஸ்தான் ராணுவத்தின் அறிவிப்பு எட்டப் போவதில்லை.
அந்த அறிவிப்பு உண்மையா? அது உண்மையானால் நமது விமானிகளின் நிலை என்ன? ஐந்தில் மூன்று விமானங்கள் புதிதாக விமானப் படையில் சேர்க்கபட்ட ரஃபேல்களாமே? நமது விமானப் படை அவ்வளவு பலகீனமானதா?
ஏவுகணைத் தாக்குதல் என்று தானே நினைத்திருந்தோம்? ஏன் எல்லை தாண்டி நமது விமானங்கள் பறந்தன? என ஏராளமான கேள்விகள் எழுகின்றன. ஆனால் நமது விஸ்வகுருவிற்கோ உள்ளூர் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் வழக்கம் கிடையாது. இது குறித்த நமது அரசின் பதில் என்ன என மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது.
**********
போர் இரு புறமும் இழப்புக்களை ஏற்படுத்தும். பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்தைக் குலைக்கும். பல தலைமுறைகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்துத் தலை நிமிர்ந்த குடும்பங்கள் உருக்குலைந்து போகும். அதை விட நமது எல்லைகளைக் காத்து நிற்கின்றனர் எனப் பெருமையோடு நாம் அனுப்பி வைத்த குல மகன்களை நாம் எல்லை தாண்டிச் செல்லப் பணித்துப் பலியாடுகளாக்க வேண்டியிருக்கும். அந்த வீரர்களின் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், மனைவிகள் மற்றும் மக்களின் நிலையில் இருந்து சிந்தித்தால் போர்க்கூச்சல் எழும்பாது.
பல்லாண்டு கால ஆட்சியின், அரசு அதிகாரத்தின் தோல்விகளை மூடி மறைத்துப் பூசி மெழுகுவதற்கான ஒப்பனையே அவசியமற்ற ஒரு போர். இது இரு தரப்பு அரசியல்வாதிகளுக்கும், பன்னாட்டு ஆயுத உற்பத்தியாளர்களுக்கும் லாபத்தை அளிக்கக் கூடிய நாடகம்.
மக்களுக்கு இழப்பைத் தவிர வேறொன்றும் மிஞ்சப் போவதில்லை.