ரோட்டைப் பார்த்து ஓட்டு!!!

I
Ilango Ramasamy
ரோட்டைப் பார்த்து ஓட்டு!!!

இன்று கோடை விடுமுறைக்காக ஊருக்குக் கிளம்ப வேண்டும். கடைசி நேர ஷாப்பிங்கிற்காக மஸ்கட்டிற்குள் சுற்றிக் கொண்டிருந்தோம். தலைவி Boss சீட்டில் அமர்ந்து "சம்முவா வண்டிய உடறா" என்றால் உடுவதும், "நிறுத்றா வண்டிய" என்றால் நிறுத்துவதுமாகப் பொறுப்பாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். 

குர்ரம் to மதீனத் கபூஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது வலதுபுறம் Enfield Royal Clinics என்ற பெயர்ப் பதாகை கண்ணில் பட தலைவி அருகில் இருப்பதை மறந்து சப்தம் போட்டுச் சிரித்து விட்டேன்

"என்ன? " என்பதாக முறைத்துப் பார்த்த தலைவியிடம் காரணத்தை விளக்கிச் சொல்லி இது அரபிகளின் இட வலச் சிக்கலால் வந்த வினை என மீண்டும் சிரித்தேன். நான் கெக்கே பிக்கே என அடக்க மாட்டாமல் சிரிக்க.... "அய்ய பெரிய ஜோக்கு ..... ஒழுங்கா முன்னாடி ரோட்ட....." என வழக்கம் போலத் தலைவி என்னைத் திட்ட வாயெடுக்க..... 

அதே நேரத்தில் எனக்கு இடதுபுற லேனில் சற்று முன்னே போய்க் கொண்டிருந்த ஒரு தறுதலை எந்த முன்னறிவிப்புமின்றிச் சரேலென எனக்கு முன்புறம் பாய்ந்தது. நூறு கிலோ மீட்டர் வேகம் கொண்ட சாலையில் 110 ல் போய்க் கொண்டிருந்திருப்போம்.

எனக்குச் சிறு குடல், பெருங்குடல், அதற்கும் கீழே இருக்கும் குண்டு மணிகள் என் மொத்தமும் வாய்க்கு வந்து விட்டன. வெலவெலத்துப் போனவன் கண்ணிமைக்கும் நேரத்தில் ஹாரனை அழுத்திப் பிடித்துக் கொண்டே இடது புறம் நொடித்தேன். நல்ல வேளையாக எந்தச் சம்பவமும் இல்லாமல் தப்பிப் பிழைத்தோம். 

அடுத்து ஆரம்பித்த புயல், இடி, மின்னல், சூறாவளி, ஆலங்கட்டி மழை எனத் துவைத்தெடுத்து விட்டது. 

எல்லாம் பெத்ததச் சொல்லணும்... வளத்தி வெச்சிருக்கற லட்சணம் அப்படி என புயல் கரை லைக் கடந்து எல்லை தாண்டி வேறிடத்தில் மையம் கொண்டு சிறிது நேரம் சுழன்றடித்தது. 

Isfahan sweet stall அழைத்துச் சென்று க்ரீம் Ball வாங்கிக் கொடுத்தவுடன் தான் கொடும் புயலானது மீண்டும் தென்றாலானது. 

இப்படியாகக் கோடை விடுமுறை இடி மின்னலுடன் இனிதே துவங்கியது....

முந்தைய அத்தியாயம் · Previous Chapter

முதல் அத்தியாயம் · First Chapter

அடுத்த அத்தியாயம் · Next Chapter

இறுதி அத்தியாயம் · Final Chapter

2 வாசிப்புகள்
பகிர்: 0 பகிர்வுகள்

கருத்துகள் (0)

இன்னும் கருத்துகள் எதுவும் இல்லை. முதல் கருத்தை எழுதவும்!