கவினின் படுகொலையால் அதிர்வுற்ற ஒரு எழுத்தாளர் இந்த நாடு இளைஞர்கள் வாழப் பாதுகாப்பற்றது. எனவே படித்த இளைஞர்கள் நல்ல வாய்ப்புக்களை உருவாக்கிக் கொண்டு மேற்குலக நாடுகளுக்குக் குடியேறி விடுவது நல்லது என மனம் நொந்து ஒரு பதிவிட்டிருந்தார்.
எனக்குமே அவர் கூற்றில் ஒப்புதல் உண்டு. இந்தியாவில் வாழ்வதை விட மேற்குலகில் அல்லது மத்தியக் கிழக்கில் வாழ்வது இலகுவானது மற்றும் பாதுகாப்பானதென்பது எனதெண்ணம். வேறொரு நாட்டிற்குச் சென்று குடியேறி, குழந்தைகளை வளர்த்து, ஆளாக்கி, நாம் ஒய்வு பெற்று, கிழடு தட்டி நல்ல வண்ணம் வாழ்ந்து மடிவதில் ஏராளமான சிக்கல்களும் உள்ளன.
இந்தியாவில் ஆணவக் கொலைகளென்றால் அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம். இங்கு லஞ்சம், வேலை வாய்ப்பின்மை, தொடர் விலைவாசி உயர்வு, மறைமுக வரிச் சுமை எனப் பல்வேறு வாழ்வியல் சிக்கல்கள் இருப்பின் மேற்குலகில் போதை மருந்துக் கலாச்சாரம், தனிமை, மன அழுத்தம் போன்ற மிரள வைக்கும் சவால்கள் இருக்கின்றன.
இருபுறங்களிலும் பட்டியலிட ஏராளமான நன்மைகளும் உண்டு. என்னளவில் இந்தியாவில் பணக்காரராக, உயர் நடுத்தரக் குடும்பமாக வாழ்வது எளிது. எல்லா வேலைகளுக்கும் எளிதில் ஆள் வைத்துக் கொள்ளலாம். முடிவெட்டுவது, துணி துவைப்பது, இஸ்திரி போடுவது, வண்டி வாகனங்களைப் பழுது பார்ப்பது, ப்ளம்பிங், எலக்ட்ரிக்கல், பெயிண்ட்டிங் கொத்தனார் என அனைத்துப் பணியாளர்களுக்கும் கொடுக்க வேண்டிய காசைக் கொடுத்து அனுசரித்து வைத்துக் கொண்டால் வாழ்க்கை சுலபம்.
தடுக்கி விழுந்தால் உணவகங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பழக்கடைகள், Swiggy, zomatto, ott, சூப்பர் மார்க்கெட்டுகள் என உலகின் அத்தனை வசதிகளும் நமது வீட்டு வாசலுக்கே வந்து விட்டன. என்ன, சேவைதரத்தில் குறைபாடுகள் இருக்கின்றன. அவையும் காலப் போக்கில் மேம்படும் என நம்பலாம்.
மற்றபடி நமது தெரு முக்குகளில் கொட்டிக் கிடக்கும் குப்பை, சாக்கடை, கொசு, காதைக் கிழிக்கும் இரைச்சல், மாசு, புகை என இந்தியர்களின் முன் இருக்கும் சிக்கல்கள் எதுவும் வளர்ந்த முதல் உலக நாடுகளில் கிடையாது. அதே போலப் பணமும், அதிகாரமும் படைத்தவர்கள் இங்கு சட்டத்தை வளைப்பது எளிது.
ஆனால் சட்டம் என்ற இருண்ட உலகிற்குள் ஏதாவது சிவில் வழக்குகளில் நுழைந்து வெளி வருவது எவருக்கும் லேசுப்பட்ட காரியமல்ல. சிறு சிறு வழக்குகளுக்குக் கூட சர்வ சாதாரணமாக பத்திருபது வருடங்கள் அலைந்து திரிய வேண்டிய அவலம் இருக்கிறது.
ஆனால் இன்றும் நடுத்தர வர்க்கத்தினரது வாழ்க்கைத் தரம் என்னளவில் துயரமானதென்றே நம்புகிறேன். அதுவும் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெரு நிறுவனங்களில் கைக்கும் வாய்க்கும் போதாமல் புறாக் கூண்டு போன்ற வாடகை வீடுகளில் வாழும், அன்றாடம் பணியிடத்தை அடைய மணிக்கணக்கில் பயணம் செய்யும் மக்களின் பாடுகளை நினைத்தால் அடிவயிறு கலங்குகிறது. நடுத்தர வர்க்கத்தினருக்கே வாழ்வு அவ்வளவு சவாலானதெனில் இந்தியர்களில் பெரும்பாலானோரான கீழ் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை எடை போட்டால் நாம் நம் தாய்நாடு குறித்துப் பெருமிதம் கொள்ளக் கூடிய அளவிலா இருக்கிறோம்?
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் வாழ்வதில் பெருமிதம் கொள்கிறேன் என நன்றியுணர்ச்சியுடன் குறிப்பிடும்
எழுத்தாளர் முன்வைக்கும் காரணிகள் அவரது தனிப்பட்ட வாழ்வு மற்றும் அனுபவத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அவருக்குக் கிடைத்த சூழுலும், வாய்ப்புக்களும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கிட்டுமா என இயல்பாக எழும் கேள்விக்கு என் மனம் எதிர் மறையான பதிலையே தருகிறது.
சுத்தம் குறித்த அயலக இந்தியர்களது வாதம் சிறு பிள்ளைத் தனமானதென மட்டையடியாக எதிர் தரப்பினரது வாதங்களை ஒதுக்கித் தள்ளுகிறார். ஆனால் எனக்கு அது மிக முக்கியமான சிக்கலாகத் தோன்றுகிறது.
மத்தியக் கிழக்கில் அடைத்துக் கொண்ட சாக்கடைகளை உள்ளிறங்கித் தூர்வாரும் பணியாளர்கள் கிடையாது. கட்டிடப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், சிகையலங்காரம் செய்பவர்கள், தோட்ட வேலை செய்பவர்கள் என அனைத்து ஊதியம் குறைவான பணியில் உள்ளவர்களுக்கும் கூட குளிர் சாதன வசதியும், கழிப்பறைகளும் கொண்ட தங்குமிடங்களும் மூன்று வேளை உணவும் உறுதி செய்யப்பட்டுள்ளன. குப்பை அள்ளும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் கையுறைகளும் காலுறைகளும் அணிந்தே பணிக்குச் செல்கின்றனர். நாடு முழுவதும் பொதுக் கழிப்பறைகள் உண்டு. தெருவில் மலம் கழிக்கும் நிலைக்கு எவரும் தள்ளப் படுவதில்லை. இந்த விடயங்களை விமர்சிப்பதே சிறு பிள்ளைத் தனமென்பதை என்னால் ஏற்க இயலவில்லை.
நமது நாட்டில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லையென்பது மற்றொரு பெரிய வித்தியாசம். உடலுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு என்பது குறித்த எந்த எச்சரிக்கை உணர்வும் பெரும்பான்மை சமூகத்திடம் கிடையாது. நமது நாட்டில் நெரிசலில் சிக்கியதாலும், தீ விபத்துக்களாலும், நீரில் மூழ்கியும், சாலை விபத்துக்களிலும் உயிரிழப்பவர்களின் சதவிகிதத்தை மேற்குலக நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியாவில் வாழ்வதில் உள்ள அபாயத்தின் விஸ்தீரணம் புரியும்.
நமது நாட்டில் ஆண்டுதோறும் தவறாது நிகழும் மலக்குழி மரணங்களும், பட்டாசுத் தொழிற்சாலை விபத்துகளும் வளர்ந்த நாடுகளில் அத்தி பூத்தாற் போல் நிகழும் விபத்துகள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
வேறொரு நாட்டிற்குப் புலம் பெயர்ந்து தங்கள் அடையாளத்தைத் தொலைக்கவும் விரும்பாது அந்நாட்டு மக்களோடு கலக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிப்பது இயல்பே. ஆனால் அதனை அபாயம் எனக் கருதத் தேவையில்லை. அதை விட முறையாகக் குடியுரிமை பெற்றவர்களை அந்நாடுகள் அகதிகளாக நடத்துவதில்லை. அம்மக்களுக்கு ஓட்டுரிமையும், சமூகப் பாதுகாப்பும் உறுதி செய்யப் படுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் என அனைத்துத் தளங்களிலும் புலம் பெயர்ந்து குடியரிமை பெற்றவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப் படுகிறது.
என்னைப் பொருத்த வரையில் கல்விக்காகவும், பொருளாதார ஏற்றத்திற்காகவும், வேற்றுலக அனுபவத்திற்காகவும் ஒரு சில வருடங்களுக்காவது அயல் நாடுகளுக்குச் சென்று வருதல் நல்லது. பணம் சம்பாதித்து விட்டு நான் எளிமையாக வாழ விரும்புகிறேன் எனச் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம்.
அதே போல முதலாம் உலகின் வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகளுக்குக் குடியேறிப் பல வருடங்கள் வாழ்ந்து பார்த்து விட்டு தாய்மடியின் பெருமை தேடி வந்தமர்கிறேன் என்போரையும் பாராட்டலாம்.
அப்படியல்லாது மேற்குலக நாடுகளின் சட்ட திட்டங்கள், கல்வி, வாழ்க்கைத் தரம், நுண்கலை, ஆராய்ச்சி, இலக்கியம் மற்றும் ஜனநாயக உரிமைகள் போன்ற அனைத்து நல்ல அம்சங்களையும் ஒட்டு மொத்தமாகப் புறந்தள்ளி விட்டு அந்நாட்டு குடிமக்களின் இனவாதம் நமது நாட்டில் உள்ள சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எவ்விதத்திலும் குறைவானதல்ல எனப் பொத்தாம் பொதுவாக இணை வைக்கும் வாதத்தை என்னால் ஏற்க முடியவில்லை.
என் தனிப்பட்ட அனுபவத்தில் எனக்கு வேலை கிடைத்து வெளி நாடு சென்ற பிறகு வாழ்வையும், உலகையும் நான் பார்க்கும் பார்வை விசாலப்பட்டது. பல தரப்பு மக்களோடு கலந்துரையாடும் அனுபவம் எனக்கு ஏராளமான புதிய விடயங்களையும் அனுபவங்களையும் கற்றுக் கொடுத்தது. எனது தன்னம்பிக்கை பன் மடங்கு அதிகரித்துள்ளது. எனது திறன்கள் மேம்பட்டுள்ளன. புதிய திறன்களை வளர்த்துக் கொண்டுள்ளேன். நான் குறிப்பிட்டுள்ள இத்தனை அம்சங்களையும் என்னில் மட்டுமின்றி என்னைச் சுற்றியுள்ள புலம் பெயர்ந்து வாழும் பலவேறு இனம் மற்றும் நாட்டினருக்கும் பொருந்துமென என்னால் உறுதியளிக்க முடியும்.
அதனால் இந்தியாவில் கற்பதையும், வாழ்வதையும் விட வாய்ப்புக் கிடைத்தால் முதலாம் உலக நாடுகளுக்கோ அல்லது மத்தியக் கிழக்கு நாடுகளுக்கோ, சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கோ புலம் பெயர்வது இளைஞர்களுக்கு நல்லதென்பதே எனது உறுதியான நம்பிக்கை.
அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தக்க பலன் கிடைகுமா என்பதை உறுதி செய்து கொண்டு விமானம் ஏற வேண்டும் என்பதே நான் அவர்களுக்குச் சொல்லும் ஆலோசனை. அவர்களால் எந்தக் கணத்திலும் தாயகம் திரும்ப முடியும் என்ற பாதுகாப்பு இருக்கும் போது அவர்கள் வெளிநாடுகளுக்குத் துணிந்து செல்ல வேண்டும். அந்த நாடுகளில் உள்ள நம்மவர்களின் துணை கொண்டும், சுய முயற்சியிலும் முன்னேறப் பார்க்க வேண்டும். நம் நாட்டில் இருந்து மேலும் பல உறவுகளையும், நட்புக்களையும் கை பிடித்து அழைத்துச் சென்று அவர்கள் வாழ்வும் வளம் பெற உதவ வேண்டும்.
இவ்விடத்தில் அப்பதிவர் குறிப்பிட்டதைப் போன்று நம்மவர்கள் ஒன்றும் அங்கு அகதிகளாகக் குடியேறவில்லை என்பதை நினைவில் நிறுத்த வேண்டுகிறேன். உலகிலேயே அதிகம் புலம் பெயர்பவர்கள் பட்டியலில் இந்தியர்களுக்கே முதலிடம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இப்புள்ளி விவரத்தின் பின் உள்ள காரணங்களை ஆராய்ந்தால் ஏன் ஒவ்வொரு ஆண்டும் இத்தனை கோடி மக்கள் நம் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அது மட்டுமின்றி அப்படி அவர்கள் வெளியேறுவதே அவர்களுக்கு நல்லது என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும்.
சொல்லப் போனால் நமது நாட்டின் சாதகங்களையும் மற்றும் மேலை நாடுகளின் வாழ்க்கைத் தரத்தையும், மிகச் சிறந்த பாதுகாப்பையும், போதைப் பொருட்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் போன்ற எந்த சமூக அவலங்களும் இல்லாத, வரி செலுத்தத் தேவையில்லாத மத்தியக் கிழக்கு நாடுகளளவிட சுவிட்ஸர்லாந்து, நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து குடியுரிமை பெறுமாறே நான் என்னைச் சுற்றியுள்ள இளைஞர்களுக்கு ஆலோசனை கூறுகிறேன்.
#கதைங்கோ
#எண்ணங்கள்
#புலம்பெயர்தல்