ஏதாவது வாசிங்களேன்!!!

I
Ilango Ramasamy
ஏதாவது வாசிங்களேன்!!!

நம்ம கேலக்ஸி பாலாஜி அண்ணன் போன வருஷம் ஒரு சிறு கதைப் போட்டி நடத்துனாரு. அதுல தேர்ந்தெடுக்கப் பட்டுப் பரிசளிக்கப்பட்ட பத்துக் கதைகளைத் தொகுத்து "பிணையல்" என்ற நூலாக கேலக்ஸி பதிப்பித்திருக்கிறது. 

அந்தப் புத்தகத்தை அண்ணன் அவரது மரியாதைக்குரிய அத்தாட்சிக்கு அன்புப் பரிசாக அளித்திருந்தார். அவரது குரல் வழிக் கதைகளுக்குத் தீவிர ரசிகையான எனது தலைவிக்கு நேற்று அந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஆசை வந்து விட்டது. நான் படுக்கைக்கு வந்த போதே நல்ல தூக்கக் கலக்கம். என்னிடம் அதைப் படிக்கச் சொல்லி அவர் கேட்க நான் "பூ" எனக்குப் பயங்கரமா தூக்கம் வருது.... நீ படி நான் கேக்குறேன் எனக் கெஞ்சினேன்.... 

நான் கெஞ்சிவிட்டால் தலைவிக்கு மனது இளகிவிடும். எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து முடிப்பார். என் மீது அவ்வளவு காதல். ஆனால் சாதாரணத் தமிழையே தட்டுத் தடுமாறி எழுத்துக் கூட்டிப் படிக்கும் ஆங்கிலப் புலவருக்குக் கடுமையான வட்டார வழக்கும், உவமான உவமேயங்களும், சொலவடைகளும், கேள்விப் பட்டேயிராத வார்த்தைகளும் விரவிக் கிடந்த அக்மார்க் தமிழ்க் கதையைத் துணிந்து வாசிக்கும் அளவுக்கு என் மீது பிரியமிருக்கும் என்று நான் நினைத்தே பார்க்க வில்லை. 

ஆனால் தலைவி வாசிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே அந்தப் பிரியத்தின் பாதிப்பு எத்தகையது எனப் புத்திக்குப் பிடிபட்டு விட்டது. ஆனால் அதையும் தாண்டி நித்திரைத் தேவன் என்னைப் போட்டு அழுத்தியதால் அந்தப் பாதிப்பிற்குப் பிடி கொடாது என்னையும் அறியாது வாயைப் பிளந்து விட்டிருந்தேன். காலை எழுந்தவுடன் தலைவி வாய் கொள்ளாத சிரிப்போடு என்னைச் செல்லமாகக் கடிந்து கொண்டார்.  

இன்றிரவு நாத்திகர்களாக இருப்பதன் பலன் என்ற பதிவை எழுதிவிட்டுத் தூங்கலாம் எனப் படுக்கைக்கு வந்தேன்

தலைவியிடம் இன்னைக்கு "உலக நாத்திகர் கள் தினமாம், அதனால ஒரு பதிவு எழுதுனேன். நல்லா வந்திருக்கு. படிக்கறேன் கேக்கறயா? " என்றேன்

"நேத்து நான் எவ்ளோ ஆசையா கேட்டேன். முடியாதுன்னுட்டீங்கள்ள? அந்தக் கதைய அவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்கிறேன் ஆனா நான் படிக்க ஆரம்பிச்சோன்னே வாயப் பொளத்துட்டீங்க.... என்னால அதப் படிக்க வே முடியல-" என மிகவும் வருத்தப் பட்டார்

"சாரிடா ..... இந்தா இப்ப படிக்கறேன்" எனத் தலைமாட்டில் இருந்த புத்தகத்தை எடுத்தேன். 

"இல்ல இல்ல மொதல்ல நீங்க எழுதுன பதிவ படிங்க" என்றார்.

  "இல்லடா நீ ஆசைப்பட்ட கதைய மொதல்ல வாசிக்கிறேன். என்னோட பதிவு உனக்கு மொக்கையா இருக்கும். அப்புறம் நான் கதய வாசிச்சு முடிக்கறதுக்குள்ள நீ தூங்கிடுவ" என்றேன். 

"அதனாலதான் சொல்றேன் நீங்க எழுதினத மொதல்ல படிச்சிருங்க" என்றார்

சரி ஏதோ அதிசயமாக நமக்குக் கிடைக்கும் மரியாதையை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும் எனப் பதிவை வாசித்தேன்

சாவு வீட்டுப் பத்தியை வாசிக்கும் போதே "பூசணிக்கா ஒடைக்கறது? " என ஆர்வமாகக் குறுக்கிட்டார்..... 

"அதுவுந்தான் பின்னாடி வருது" எனச் சொல்லிக் கொண்டே மேலே படித்தேன். வாசித்து முடித்தவுடன், "வெரிகுட்... நல்லாத்தான் எழுதி இருக்கீங்க" என மனது நிறையப் பாராட்டினார். 

அடுத்து "பிணையல்" லைக் கையில் எடுத்து அறிவுச் செல்வன் என்ற எழுத்தாளர் எழுதிய "பாஸ்கரனின் பகல்களும், பானுமதியின் இரவுகளும்" என்ற தொகுப்பின் முதல் சிறுகதையை வாசிக்கத் துவங்கினேன். 

எடுத்த எடுப்பிலேயே கதை என்னை உள்வாங்கிக் கொண்டது

"பெறகென்ன பெத்த பிள்ளய எருமைக்கா கட்டி வப்பாக? " என்ற வரியைப் படித்த போது நேற்றிரவு தலைவி வாசித்துக் கொண்டே சிரித்தது நினைவிற்கு வந்தது. 

அடுத்துச் சற்று நேரத்திலேயே அவர் ரசித்துச் சிலாகித்த, 

"பொந்து கெடச்ச எடத்தில புகுந்துக்குறதுக்கு நல்ல பாம்புக்கென்ன சொல்லியா குடுக்கணும்? " என்ற வரி வந்தது. 

இப்படி இரு பெண்களுக்கிடையேயான உரையாடலில் அடுத்தடுத்து சுவையான சங்கதிகள் வந்து விழுந்த வண்ணமேயிருந்தன. 

பாஸ்கரனுக்கும், பானுமதிக்கும் நடந்த திருமணத்தையும் இருவருக்கும் இடையே உள்ள பிரியத்தையும் உணர்ந்து மனம் மகிழ்ந்தது. ஆனால் எல்லாம் நல்லபடி நடந்தும் பானுமதியின் இரவுகளைப் தகிக்கும் பாலையாக்கி குளிர் காற்று வேண்டிக் கொய்யா மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் காத்தாட உறங்கும் பாஸ்கரனின் செயலில் கதையின் முடிச்சு விழுந்தவுடன் படுத்தவாறே வாசித்துக் கொண்டிருந்தவன் ஏறித் தலையணையில் முதுகைச் சாய்த்து வாகாக அமர்ந்து வாசிக்கலானேன். 

"இந்தக் கிறுக்கன் ஏன் இப்பிடிப் பண்றான்? பாவம் பானுமதி... " என மனம் குமைந்தது. 

அதன் அடுத்த கட்டம் சாதாரணமாக யூகிக்கக் கூடியதாக இருப்பதாலோ என்னவோ ஆசிரியர் பட்டும் படாமல் கதையை வேகமாக நகர்த்துகிறார். அது சாமர்த்தியமான முடிவு. 

கதையின் முடிவு அட போட வைத்ததோடு ஆண்டவனின் இருப்பைக் கேள்விக் குண்டாக்கியதைக் கண்டு ஆச்சரியப் பட்டேன். Post Imageஎன்றைக்கும் இல்லாத திருநாளாக இன்று ஒரு சிறுகதையை வாசிக்க அதுவும் நாத்திகவாதம் பேசுகிறதே என ஆச்சரியப் பட்டேன். ஆத்திகனாக இருந்திருந்தால் எல்லாம் அந்தப் பரந்தாமன் செயல் எனக் கன்னத்தில் போட்டுக் கொண்டு மயிர்க் கூச்செரிந்திருப்பேன். 

இதற்குள் நல்ல தூக்கத்தில் இருந்த "பூ" என் குரல் அடங்கியதால் விழித்தெழுந்து

"மாமு தூங்கிட்டேண்டா, என்ன ஆச்சு? " எனக் கேட்டார் .... "நீ தூங்கு சாமி, நாளைக்குப் பாத்துக்கலாம்" எனத் தலையைத் தடவி தூங்க வைக்க முயன்றேன். "இல்ல கடேசியா என்ன ஆச்சுன்னு படியேன் ப்ளீஸ்" என்றார். "இல்லடா நீ எந்த இடத்தில தூங்கினேன்னு தெரியாம க்ளைமாக்ஸ மட்டும் படிச்சுப் பிரயோசனமில்ல... ஒனக்குப் புரியாது" என்றேன்

"அவன் கட்டலப் போட்டுத் தூங்கப் போனான்ல அங்க இருந்து படி" என்றார்

"அதுக்கப்புறம் நெறையா இருக்கு நாளைக்கு வாசிக்கறேன். இப்ப தூங்கு சாமி" எனச் சமாதானப் படுத்தித் தூங்க வைக்க முயன்றேன். 

"இல்ல நீயே கதைய சொல்லிறேன்" எனக் கெஞ்சினார். பாவமாக இருந்தது.... "இல்லடா அத ஆசிரியரோட எழுத்துல வாசிச்சாத்தான் நல்லாருக்கும் நான் கண்டிப்பா நாளைக்கு வாசிக்கறேன்" இப்பத் தூங்கு எனச் சொல்லித் தூங்க வைத்தேன்

எனக்கு வந்த தூக்கம் பறந்து விட்டிருந்தது. விழித்துக் கொண்ட மூளை "புவனாவும் நானும்" என்ற ஹேஷ் டாக்கிலும் "நல்ல நூல்கள்" என்ற ஹேஷ் டாக்கிலும் எழுதி வெகு காலம் ஆகிவிட்டதை நினைவுறுத்தி எழுதுடா இனா ரானா எனக் கட்டளையிட ஒரு மணி நேரம் காணமல் போய்விட்டது.

எழுதி முடித்த பின்பு ஆசிரியர் குறிப்பைப் படித்தால் அவரும் நாத்திகராம். 

 Post Image

Balaji Baskaran அண்ணே தயவு செய்து இனிமேல் அத்தாச்சிக்கு புத்தகம் குடுத்து ஏந் தூக்கத்துல மண்ணள்ளிப் போடாதீங்கண்ணே. வயித்துக்கு நல்ல சோறு போடறதோட நிறுத்திக்குங்க. புண்ணியமாப்  போவும்.

முந்தைய அத்தியாயம் · Previous Chapter

முதல் அத்தியாயம் · First Chapter

அடுத்த அத்தியாயம் · Next Chapter

சூடா ஒரு ஃபலூடா!!!

7 வாசிப்புகள்
பகிர்: 0 பகிர்வுகள்

கருத்துகள் (0)

இன்னும் கருத்துகள் எதுவும் இல்லை. முதல் கருத்தை எழுதவும்!