சூடா ஒரு ஃபலூடா!!!

I
Ilango Ramasamy
சூடா ஒரு ஃபலூடா!!!

நேற்று மாலை நல்ல குளிர். நிஸ்வாவில் ஊதக்காற்று உடலை உலுக்கியெடுத்துக் கொண்டிருந்தது. தலைவிக்குத் திடீரென ஃபலூடா சாப்பிடும் ஆசை தலை தூக்க "சம்முவா உட்றா வண்டிய" என என் தொடையை நானே தட்டிக் கொண்டு அவரை ஒரு நல்ல தொரு கடைக்கு அழைத்துச் சென்றேன்

வளைகுடா நாடுகளில் நாம் காரை விட்டுக் கீழிறங்கத் தேவையில்லை. இங்கு பெரும்பாலான காஃபி ஷாப்புகள் துரித உணவகங்களாகவே செயல்படுகின்றன. நாம் வண்டியைக் கொண்டு போய் நிறுத்தியவுடன் பரிசாரகர்கள் தலை தூக்கிப் பார்ப்பர். நாம் ஒன்று இரண்டு என விரல்களில் எண்ணிக்கையைக் காட்டினால் பாலூற்றித் தயாரிக்கப் பட்ட "கரக் சாய்" என்றழைக்கப்படும் தேநீர் என்றர்த்தம். ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்து கொடுத்து விட்டு காசை வாங்கிக் கொண்டு சென்று விடுவர். ஓமானில் ஒரு தேநீர் 100 பைசா. நான் ஓமானுக்கு வந்த போது 14 ரூபாயாக இருந்த தேநீர் நமது ஜீ யின் புண்ணியத்தால் இன்று 24 ரூபாயாகி விட்டது. 

சரி கதைக்கு வருவோம். அப்படி அந்தக் கடையில் கொண்டு போய் வண்டியை நிறுத்தியவுடன் வழக்கம் போல பரிசாரகர் தலையைத் தூக்கி என்னைப் பார்த்தார். அதற்கு, "எத்தனை டீ வேண்டும்? " என்றர்த்தம். நான் அவரிடம் மெனு கார்டைக் கொண்டு வரவும் என சைகை செய்ய மனிதர் உற்சாகமாய் அந்தப் பட்டியல் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். 

அதனைத் தலைவியிடம் கைமாற்றினேன். வெகு நேரம் ஆராய்ச்சி செய்தவர் "உனக்கு என்ன வேணும், வெண்ணிலா? இல்ல மேங்கோ? " என்றார். எனக்கு ஸ்ட்ராபெர்ரி மிகவும் பிடிக்கும் என்பதை நன்கு அறிந்தவராகையால் அந்த ஆப்ஷனைக் கேட்கவேயில்லை. நான் கிளம்பும் போதே எனக்கெதுவும் தனியாக வேண்டாம் என்றும் அவர் வாங்குவதில் சிறிதளவு கொடுத்தால் போதும் எனவும் சொல்லியிருந்ததன் விளைவு.

குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த அந்தத் தம்பியைப் பார்க்க எனக்குப் பாவமாக இருந்தது. ஒரு வழியாக மெனுகார்டில் இருக்கும் அனைத்துப் பானங்களையும் ஆராய்ந்து முடித்தவர் அவருடைய Signature style ல் புருவத்தை உயர்த்தி " ஒன் மேங்கோ ஃபலூடா" என்றார். சரி எனத் திரும்ப எத்தனித்தவரிடம் " பட் வித் அவுட் ஐஸ் க்ரீம்" என்றாரே பார்க்கலாம். அந்தத் தம்பி கதிகலங்கி விட்டார். தினமும் இது போலப் பல குண்டுகளைத் தலையில் தாங்கும் எனக்கே தலைவியின் கோரிக்கை திகிலைக் கிளப்பி விட்டது. 

அந்தத் தம்பி "குணா" திரைப்படத்துக் கமலஹாசனைப் போல மலங்க மலங்க விழித்து ஒரு மாதிரி புரிந்தும் புரியாமலும் தலையை ஆட்டிய வாறே திரும்ப எத்தனித்தார். அதற்குள் தலைவி அவரைத் தடுத்து நிறுத்தி, "தம்பி அவசரப் படாதீங்க... பொறுமையா முழுசையும் கேட்டுட்டுப் போங்க" என அடுத்த இடியை இறக்கினார். " எனக்கு ஃபலூடால பழத்துண்டு நெறையா இருந்தா பிடிக்காது அதனால அத முடிஞ்ச அளவுக்குக் கொறைச்சிடுங்க" என்றார்.

 இப்போது அந்தத் தம்பி "சேது"ட ச்சீயானாகி விட்டிருந்தார். நான் மனதுக்குள், "இன்னைக்கு ஃபலூடா வெளங்குனாப்ல தான்"ன நினைத்துக் கொண்ட, " ஏங மேடம ஐஸ்க் கீரீமும் இல்லாம, பழமும் இல்லாம அவய்ங்க எதுல ஃபலூடா செய்ய முடியும்? இதெல்லாம உங்களுக்கே நியாயமா? " எனக் கேட்டேன். 

"ஆ, அதெல்லாம் அவய்ங்களுக்குத் தெரியும். ஒரு கஸ்டமரா எனக்கு என்ன வேணுமோ அத நான் கேக்குறேன்.... உனக்கென்ன போச்சு....?" என என்னை வறுக்க ஆரம்பித்து விட்டார். இப்படி எனக்கு அர்ச்சனை விழுந்து கொண்டிருந்த போதே உள்ளிருந்து செஃப் எங்களது வண்டிக் கருகே வந்து விட்டார். நான் எதிர்பார்த்ததைப் போலவே அவருக்கு வாழ்நாளில் இப்படி ஒரு சோதனை ஏற்பட்டிருந்ததில்லை போலும். வந்தவர் தயங்கித் தயங்கி, "மேடம் ஃபலூடால ஐஸ்க்ரீம் இல்லாம எப்படி? " என இழுத்தார்

ஓரக்கண்ணால் எனது நமுட்டுச் சிரிப்பைப் பார்த்துக் கொண்டே அசால்டாக, "அட ஐஸ்க்ரீம் வேண்டாம்னா அந்த மேல ஒரு ஸ்கூப் போடுவீங்கள்ல? அத சொன்னம்பா" என்றார். அந்த மனிதருக்குப் போன உயிர் திரும்ப வந்ததை அவர் கண்களில் மின்னிய வெளிச்சத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. "ஓக்கே மேடம் ஒக்கே மேடம்" எனத் திரும்ப எத்தனித்தவரிடம் "பழத் துண்டு இல்லாம பாத்துக்கணும் சரியா? " என்றார். என் மனதிற்குள், "அப்படிப் போட்றா வெடிய" எனக் கூவினேன். 

அந்த செஃப் சற்று புத்திசாலி என நினைக்கிறேன். அந்த ஒரு சில நிமிடங்களில் சூழலை நன்கு உள்வாங்கி விட்டிருந்திருக்கக் கூடும். அதனால் தலைவியின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாது, "சரிங் மேடம், கண்டிப்பா மேடம்" என அவசர அவசரமாக நடையைக் கட்டினார். சிறு சந்தர்ப்பத்தைக் கொடுத்தாலும் தலைவி அடுத்து ஏதாவதொரு அஸ்த்திரத்தை வீச வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்த வரைப் போல ஒரே ஒட்டமாக ஓடி மறைந்தார். 

வாயிருக்க மாட்டாத நான், "ஏங் மேடம் இப்படிப் படுத்தறீங்க? ஐஸ் க்ரீமும் இல்லாம, பழமும் இல்லாம எப்படி ஃபலூடா செய்ய முடியும்? " என ஆரம்பித்தேன். அவ்வளவுதான் அடுத்த ஐந்து நிமிடம் என்னைப் போட்டுப் பொளந்து கொண்டிருந்தார். எனக்கென்ன பயம் என்றால் ஃபலூடாவை வாயில் வைத்த மறுகணம் முகத்தைச் சுழித்தால் போச்சு, நான் அதை "க்வாலிட்டி சரியில்லை" எனத்  திரும்பக் கொடுத்து விட்டு மீண்டும் புதிதாகச் செய்து தரச் சொல்ல வேண்டும். அதை நினைத்த போதே எனக்கு வயிற்றைக் கலக்கியது. இதில் கொடுமை என்ன வெனில் தலைவியின் உடன் பிறப்பு இப்படி அவரது முகவாட்டம் பொறுக்காது பலமுறை மேசைக்கு வந்த உணவைத் திரும்ப அனுப்பியதைக் கண்டிருக்கிறேன். 

ஒரு வழியாக அந்தப் பாவப்பட்ட ஃபலூடா எங்களை நோக்கி வந்தது

அதனைக் கையில் வாங்கியவர் முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு "என்ன ஃபலூடா சூடா இல்லாம இவ்வளவு ஜில்லுன்னு இருக்கு? " என்றார்

அந்தக் குளிரிலும் எனக்குக் குப்பென வியர்த்து விட்டது. பேயறைந்தவனைப் போலான என்னைப் பார்த்து அவர் பக பக வெனச் சிரிக்க, "பாவம்யா நீ" எனப் பார்த்த அந்தத் தம்பியின் கண்கள் என்னைச் சற்றே ஆற்றுப் படுத்தின

4 வாசிப்புகள்
பகிர்: 0 பகிர்வுகள்

கருத்துகள் (0)

இன்னும் கருத்துகள் எதுவும் இல்லை. முதல் கருத்தை எழுதவும்!