வருஷா வருஷம் ஊருக்கு வரும் போது நமக்கு இருக்கற கோட்டாவுக்கு ட்யூட்டி பெய்ட் ஷாப்ல இருந்து நாலு பாட்டில கைல புடிச்சிக்கிட்டு வந்து மக்கள குஷிப்படுத்துறது வழக்கம். நமக்கு இருக்கற பழக்க வழக்கத்துக்கு ஆறு மாசத்துக்கு முந்தி இருந்தே பாசக்கார பயபுள்ளைக வாரம் ஒருக்கா ஃபோன போட்டு மச்சி என்னிய மறந்துராதரான்னு பொங்குவாய்ங்க. எப்பவுமே ஒரு சில பேசிக் ரூல்ஸ்லாம் வெச்சிருக்கேன். ஒருத்தருக்கே தொடர்ந்து ரெண்டு வருஷம் சப்ளை கெடையாது. அப்புறம் எப்பவுமே ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் சர்வ் தான். இன்னும் ரெண்டு மூணு லிஸ்ட்ல இருக்கு. ஆனா அந்த கம்பேனி ரகசியத்தல்லாம் வெளிய சொல்லக் கூடாது.
இப்ப சொல்ல வந்த கதைக்கு வாரேன்.
இந்த வருஷம் எங்க பிஷப் ஷூபர் காலேஜோட க்ளோபல் Alumni meet இருக்கு. ஒரு மாசமா, "நான் அலுமினி மீட்டுக்குப் போகப் போறனே? செம்மயா fun பண்ணப் போறோமே? " எனத் தலைவியிடம் சீன் போட்டுக் கிட்டிருந்தேன்.
So இந்த வருஷம் 50% லிக்கர் கோட்டாவ அந்த மீட்டுக்குன்னு முடிவு பண்ணி வெச்சிருந்தேன். மஸ்கட்ல செக்கின் முடிஞ்சு, செக்யூரிட்டி செக்கின் லாம் முடிஞ்சு, "புவனா பாஸ்போர்ட்டையும் போர்டிங் பாஸையும் குடேன் நான் போய் ஏதாவது நல்ல offer இருக்கான்னு பாத்து சரக்கு வாங்கிக்கிட்டு வரேன்" என்றேன்.
"ப்பா ட்ரன்ஸிட்ல லிக்கர் அலோ பண்ண மாட்டாங்க. எப்பவுமே நம்ம சுரேஷ் சார் இதுக்காகவே ஒரு காலி பெட்டிய கொண்டு போவாரு. பக்காவா சீல் பண்ணி அங்க மறுபடி அத செக்கின் லக்கேஜாத்தான் போட முடியும்" என்றார்.
பல வருடங்களாகவே விமான சீட்டுக்கள் முன் பதிவு, பெட்டி கட்டுவது, எவ்வளவு எடை என முடிவு செய்து பரிசோதிப்பது என அனைத்தும் தலைவியின் பொறுப்பில் விட்டு விடப் பட்டு விட்டதால் எனக்குப் பெரிதாக விமான நிலைய சட்டதிட்டங்கள் பரிச்சயம் இருப்பதில்லை. அனைத்தும் அவர் பொறுப்பிற்குப் போனதற்குப் பின் உள்ள காரணங்களை அடுக்கினால் அது ஒரு முழு நீள குடும்ப நாவல் ஆகிவிடும். அதனால் இப்போதைக்கு நானொரு தலைவியின் சொல்லுக்கு மறு பேச்சுப் பேசாமல் தலையாட்டும் தஞ்சாவூர்ப் பொம்மை என்பதை மட்டும் நீங்கள் நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.
"சரி அப்போ எப்படித்தான் சரக்கு வாங்கறது? " என்றேன்.
"அதெல்லாம் காலைல ஹைதராபாத்துல வாங்கிக்கலாம் வாங்க" என வாயடைத்து கைபிடித்து அழைத்துச் செல்லப்பட்டேன். இல்லையில்லை இழுத்துச் செல்லப் பட்டேன். உடன் மைத்துனரின் மனைவி நித்யாவும், குட்டிப் புலி ஆதிரையும் வேறு இருந்ததால் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டு பல்பு வாங்கக் கூடாதென சூதானமாக சொல் பேச்சுக் கேட்கும் பிள்ளையாய் அவரைப் பின் தொடர்ந்தேன்.
பாழாய்ப் போன ஹைதராபாத் விமான நிலைத்தில் இறங்கி அன்ன நடை போட்ட மூவர் அணி ஒப்பனை அறைக்குள் நுழைந்து காலைக் கடன்களை முடித்து வெளியேற 43 நிமிடங்கள் பிடித்தன.
அதற்குள் நான்கைந்து விமானங்கள் தரையிறங்கி குடியேற்ற வரிசை சீனப் பெருஞ்சுவர் போல நீண்டு விட்டது. அங்கு ஒரு முக்கால் மணி நேரம் தேவுடு காத்து, சுங்கச் சோதனையில் அரை மணி நேரம் மண்டை காய்ந்து வெளியே வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
வெளியே செல்ல முயன்ற எங்களைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக இருபுறமும் வரிசையாக நின்று சரக்கு வாங்கிக் கொண்டு போகச் சொல்லிக் கடைச் சிப்பந்திகள் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சினர். நானும் தலையிடம் "மேடம் என என் பங்கிற்குக் கெஞ்சினேன்"
ஆனால் அவரோ "ஒரு தடவ சொன்னா கேக்க மாட்டீங்க? இங்க செக்கின்ல சரக்க ஹேண்ட் லக்கேஜா எடுத்துட்டுப் போக அலோ பண்ண மாட்டாங்க புரியுதா? எல்லாம் செக்கின் முடிசிட்டு உள்ள போய் வாங்கிக்கலாம்" எனக் கொந்தளித்தார்.
"டொமஸ்டிக் டெர்மினல்ல எப்படி ட்யூட்டி பெய்ட் ஷாப் இருக்கும்? " ன்னு கேக்க வாயெடுத்தவனுக்கு என்ன பதில் வருமென்பது தெரியுமாதலால் கடைசி விநாடியில் சமயோசிதமாக "எதுக்கும் அவங்க கிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு வரவா? " என்றேன்.
சட்டென முகத்தைத் திருப்பி மூக்கு விடைக்க வலது புருவத்தை உயர்த்தினார். என் முன் நீலாம்பரியும், சிவகாமி தேவியும் கலந்து செய்த கலவை விஸ்வரூபம் எடுத்து நிற்பதாகத் தோன்றியது. நான் சட்டென ஹட்ச் நாய்க்குட்டியாக மாறி க்யூட்டாக அவரைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு அவருக்கு முன்னே போகுமாறு கைகாட்டி பவ்யமாகப் பின் தொடர்ந்தேன்.
இந்த இடத்தில் நீங்கள் பழைய "You and I in this beautiful world" எனத் துவங்கும் Hutch விளம்பரப் பாடலையும் இசையையும் BGM ஆக மனத் திரையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
செக் இன்னிற்காக வரிசையில் நிற்கும் போது எங்களுக்கு முன் நின்ற ஒரு குடும்பத்தைச் சுட்டி ஏதோ சாடை காட்டினார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அங்கிருந்து நகன்று மீண்டும் பாதுகாப்பு சோதனைக்காகக் காத்துக் கொண்டிருந்த போது "நமக்கு முன்னாடி நின்னுக்கிட்டு இருந்த மனுஷன் எல்லா பாட்டிலையும் ஒரு சூட்கேஸ்ல வெச்சுப் பூட்டினதப் பாத்தீங்களா? நாங்கூட உங்களுக்கு சிக்னல் காட்டினேனே? " என்றார்.
"இல்ல நான் கவனிக்கல" இது நான்.
" க்கும் தேவையானதயெல்லாம் விட்டுர வேண்டியது .... ஆனா, ஒண்ணுக்கும் ஆகாத மத்த எல்லாத்தையும் பாரக்குப் பாத்துட்டு அதப் பத்தி நீள நீளமா கிறுக்க வேண்டியது. அதயும் படிச்சிட்டு லைக் போட நாலு பொழுது போகாத வெட்டி ஆபீசருங்க" என ஆரம்பித்து இங்கு பதிவில் ஏற்ற முடியாத பல அர்சனைகளை அருவியாகக் கொட்டினார். அவர் அப்படி அர்சிக்கத் துவங்கினால் எனக்குள் இருக்கும் ஆட்டோ பைலட் எம் எஸ் அம்மாவின் சுப்ர பாதத்தை ஆன் செய்து விடும்... அதன் பிறகு எத்தனை அர்ச்சனைகள் விழுந்தாலும் அத்தனையும் நமக்கு ஏகாந்தமே. இந்த ரகசியம் இன்னமும் தலைவிக்குத் தெரியாது.
ஒரு வழியாக எங்கள் முறை வந்து சேரவும் அர்ச்சனையை நிறுத்தி விட்டுச் சோதனைக்காக முன்னகர்ந்தார். எல்லாம் முடிந்து எனது பையை எடுப்பதற்குள்
"இப்ப நீங்க போய் உங்களுக்கு வேணுங்கறத வாங்குங்க பையெல்லாம் நான் எடுத்துக்கிட்டு வாரேன்" என விரட்டினார்.
அவரது குரலில் தொனித்த
உறுதியால், "உள்ளே இருந்தாலும் இருக்கும் போல" என்ற நப்பாசையில் நான் அவர்களை விட்டு விட்டு முன்னே நகர்ந்தேன். பாஸ்போர்ட்டையும் போர்டிங் பாஸையும் தவிர்த்து என்னிடம் ஏதும் இல்லை. எனது வாலட், வங்கி அட்டைகள், அலை பேசி என மொத்தமும் அந்தப் பைக்குள் தான். பாக்கெட்டில் பத்து பைசா கூடக் கிடையாது. ஹைதராபாத் விமான நிலையத்திற்கு இது தான் முதன் முறையாகச் சென்றது.
இருபுறமும் எங்காவது சாராயக் கடை தட்டுப் படுகிறதா எனத் தேடிக் கொண்டே கதவு எண் 122 ற்கான வழிகாட்டும் பதாகைகள் கைகாட்டிய திசையில் நடந்தேன். வெகு நேரம் கழித்து 122 வந்தது நான் சந்தேகப் பட்ட படியே மற்ற எல்லா வகைக் கடைகள் இருந்தாலும் சரக்கு விற்கும் கடை மட்டும் இல்லை.
"சரி நம்ப பயபுள்ளைக குடுத்து வெச்சது அவ்ளோதான். லோக்கல் சரக்கப் போட்டுட்டு கேவலமாத் திட்டி விடிய விடியக் கலாய்ப்பாய்ங்க அதுக்குத் தகுந்த மாதிரி மனச ரெடி பண்ணி வெச்சிக்க வேண்டியது தான்" என சமாதானப் படுத்திக் கொண்டேன்.
போர்டிங் துவங்கி வெகு நேரமாகியும் மூவரணி வந்து சேர்ந்த பாடில்லை. வெகு நோம் என்னைப் பதட்டத்தில் வைத்திருந்து விட்டுக் கட்டங் கடைசியாக கடேசி நிமிஷத்தில் வந்து சேர்ந்தனர். வழியில் தகுந்த காலை உணவைத் தேடிக் கண்டறிந்து வெட்டி விட்டு வர சற்றே கால தாமதமாகி விட்டதாம்.
"உங்கள எங்கல்லாம் தேடறது .... உங்களத் தேடித் தேடித்தான் டைம் வேஸ்ட் ஆயிடுச்சு" என்று ஒடு போடு போட்டார்.
அத்தோடு நிறுத்தியிருத்திருக்கலாம்,
"எங்க கண்ணுக்கு எதுவும் ட்யூட்டி பெய்ட் ஷாப் தட்டுப் படல... உங்க கண்னுக்குப் பட்டுச்சு? " என்றார்.
"இல்ல பூ...." இது நான்.
என்னை இடைமறித்து, "எனக்கு வேற அய்யோ பாவம் ஃபோனும் இல்ல, காசும் இல்ல என்ன பண்றீங்களோன்னு ஒரே கவலையாயிருச்சு" என பரிதாபப்பட்டார்.
பொங்கி வந்த ஆத்திரத்தை வழக்கம் போலக் கட்டுப் படுத்திக் கொண்டு "நாந்தான் முன்னயே சொன்னேன்ல பூ ..... டொமஸ்டிக் டெர்மினல்ல ட்யூட்டி பெய்ட் ஷாப் இருக்காது நான் எதுக்கும் விசாரிச்சிட்டு வர்றேன்னு நீ தான் வேணான்னுட்ட" எனப் பரிதாபமான குரலில் நடந்ததை நினைவுறுத்த முயன்றேன்.
எனது உண்மையான நோக்கம், "எல்லாம் உன்னால தான் வீணாப் போச்சு" என மறைமுகமாகக் குற்றம் சுமத்துவது.
நமது அதிகபட்ச எதிர்பார்ப்பே "ஸாரிப்பா தெரியாம மிஸ் கைட் பண்ணிட்டேன். நீங்களாவது க்ராஸ் செக் பண்ணிருந்திருக்கலாம்ல? " என்ற ஆறுதலான வார்த்தைகள் மட்டுமே. ஆனால் அது எவ்வளவு பெரிய தவறென்பது இந்த மரமண்டைக்கு எவ்வளவு பட்டாலும் புரிவதில்லை.
எனது குற்றச் சாட்டை தலைவி தனது கால் சுண்டு விரல் நகமாகக் கூட மதிக்க வில்லை. அதைவிட அவர் அசால்ட்டாக "நான் என்னோட ஒப்பீனியன சொன்னேன் .... உங்கள யாரு போய் கேக்க வேணாம்னு சொன்னது? " என விட்டார் பாருங்க ஒரு எத்து .... எம்பாப்பே காலில் பட்ட உதை பந்து பீரங்கிக் குண்டின் வேகத்தில் கோல் போஸ்ட்டின் ஒரு மூலைக்குள் போய்ச் செருகிக் கொள்வதைப் போல நானும் சேலம் செல்லக் காத்திருந்த இண்டிகோவின் கடைசி இருக்கையின் சன்னலோரத்தில் சென்று செருகிக் கொண்டேன்.
வீடு வந்த பிறகு சரக்கு வாங்கும் சட்ட விதிகளை ஜெமினியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். மஸ்கட்டிலேயே வாங்கி இருந்திருக்கலாம். அல்லது ஹைதராபாத் பன்னாட்டு முனையத்திலாவது வாங்கி இருந்திருக்கலாம். பேக்கிங் மட்டும் Transit Cabin luggage க்குத் தக்க செய்து தரவேண்டும் எனக் கேட்டு அதன் படி நன்கு சீல் செய்யப்பட்ட ஸ்த்ரூ கவரில் பர்ச்சேஸ் இன்வாய்ஸ் தெளிவாகத் தெரியும் வகையில் வைக்கப் பட்டிருந்தால் போதும் என ஜெமினி அறிவுத்தியது.
அதற்குப் பெயர் STEB ஆம். அதாவது Security - Tamper Evident Bag.
குடிமகன்களின் மற்றும் அவர்களது நண்பர்களின் நலனில் அக்கறை கொண்டு எழுதப் பட்ட பதிவு.
இத்தனை சங்கடத்திலும் எனக்கு ஒரே ஒரு ஆறுதல் "ஏரோப்ளேன் கதைகள்" வரிசைக்கு மற்றுமொரு கதை சிக்கியது. இதைத்தான் பெரியோர் அன்றே "Whatever Happens Be Positive" என்று சொல்லி வைத்தனர்.
கதையின் நீதி: தலைப்பிற்குப் போகவும்!!!