புருஷ லட்சணம்!!!

I
Ilango Ramasamy
புருஷ லட்சணம்!!!

"ஒரு கணவன் எப்போது கனவான் ஆகிறான்? " என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்ள ஆசைப் படுவோர் முழுப் பதிவையும் வாசிக்க. 

முதல் நாள்: சேலத்தில் தரை இறங்கியவுடன் நான் எனது தந்தையை அழைத்து "ப்பா சேஃபா லேண்ட் ஆயிட்டோம். சதீஷ் வந்து பிக்கப் பண்ணிட்டாப்ல முடிஞ்சா நைட்டு வர்ரோம், இல்லன்னா நாளைக்குக் காலைல வர்ரோம் சரியா? " என்றேன்

அவர் பதிலுக்கு "டேய் இருடா ஒரு நிமிஷம் அம்மா கிட்ட பேசு" எனக் கைமாற்றி விட்டார்

தாயம்மா ஃபோனை வாங்கி, "இளங்கோ நாங்க ஒரு பெரிய காரியத்துக்குப் போறோம் எடுக்க மூணு மணிக்கு மேல ஆயிடும். நைட்டு வர லேட்டாகும். நீங்க இருந்துட்டு நாளன்னிக்கு காலைல வாங்க .... சரியா? " என்றார்

"ரைட்டுங்மா" என்று சொல்லி விட்டு உடனடியாக தலையிடம் தகவலைச் சொல்லி விட்டேன்.

மறு நாளுக்கான திட்ட வரையரை ஆலோசனைக் கூட்டம் துவங்கியது. 

யாரோடு? தலைவி மற்றும் அவரது மனக்குரல்களோடு. 

அவ்வப்போது ஏதாவது ஒரு கேள்வி என்னிடம் வரும். நான் சமத்துப் பாப்பாவாக "உன் இஷ்டம் பூ .... உனக்கு எது வசதியோ அப்படியே செய்வோம்" என்ற என்னுடைய சேம் டெம்ப்ளேட்டை முன் வைப்பேன். இதுதான் ஒரு அனுபவசாலிக் கணவனுக்கு அழகு

ஒரு சில சமயங்களில் "நான் உங்க ஒப்பினியனக் கேட்டேன்" எனக் குரலில் சற்றே கடுமை கூடினால் நாம் சூதானமாகிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, "ஈரோடு போய் விட்டு அருக்காணி அத்தை வீட்டுக்குப் போலாமா? இல்லை அருக்காணி அத்தை வீட்டுக்குப் போய்விட்டு ஈரோடு போலாமா? " என்றொரு கேள்வி வந்தால் முதல் பதில், " உனக்கு எது வசதியோ அப்டியே செஞ்சிறலாம் பூ" என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.

ஆனால் "உங்க ஒப்பீனியன கேட்டேன்" எனக் குரலில் அழுத்தம் கூடினால் நாம் சட்டென இரண்டில் ஏதாவது ஒன்றைச் சொல்லி விட வேணடும். அதுதான் புத்திசாலிகளுக்கு அழகு. பெரும்பாலும் அதற்கு நேரெதிரான முடிவுதான் எடுக்கப் படும் என்பதை உணர்ந்து பதில் சொல்வோர் பெரும் புத்திசாலிகள் கேட்டகிரியில் வருவர்

அப்படி ஒரு முடிவெடுத்து ஈரோட்டிற்குப் போய் ஊர் சுற்றிக கொண்டிருந்த போது எனதருமைத் தமக்கையாரிடம் இருந்து மதியம் மூன்று மணி சுமாருக்கு அழைப்பு வந்தது. "இளங்கோ நாங்க நத்தம் வந்துட்டோம். நைட்டு வீட்டுக்கு வந்திடறீங்களா? டின்னருக்கு என்ன வேணும்? " என்றார்

"ஆஹா இன்னைக்கு ஷெட்யூல் டைட்டா இருக்கே மீரா.... நாங்க இப்ப ஈரோட்ல இருக்கோம். அடுத்து அருக்காணி பெரிம்மா வீட்டுக்குப் போறோம். அப்புறம் நாமக்கல் போறோம். அதனால நாளைக்குத்தான்" எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே அப்புறத்தில் தாயம்மா "அவன காலைல டிஃபனுக்கு வந்திருவாங்களா" ன்னு கேளு என உத்தரவு போட்டது

நான் உடனே, "நான் அண்ணி கிட்ட கேட்டுட்டு என்ன ப்ளான்னு ராத்திரி சொல்றேன் மீரா" என முடித்துக் கொண்டேன். நாம் யாருக்கு வேண்டுமானாலும் மகனாக, தமையனாக இருக்கலாம் ஆனால் அவை அனைத்தையும் விட எந்தச் சூழ்நிலையிலும் தலைவிக்குத் தக்க கணவனாக நடந்து கொள்வது தான் சாதுர்யம். 

இதையெல்லாம் 15 அடி தூரத்தில் நின்று ஆனந்தாஸில் இஞ்சி தட்டுவடையா அல்லது எள்ளு தட்டு வடையா என ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த தலைவி அங்கிருந்த படியே பாடி லேங்குவேஜ் மற்றும் லிப் ரீடிங் ஸ்கேன் செய்து உணர்ந்து கொண்டிருப்பார் என்பதைப் புரிந்து உடனடியாக உள்ளதை உள்ளபடி அவரிடம் ஒப்பித்து விட்டேன்

"ம் " எனக் கேட்டுக் கொண்டார். 

அதற்கு, "அதற்கு ஒன்றும் அவசரம் இல்லை. பின்னர் முடிவு செய்து கொள்ளலாம்" என்று பொருள். அவராக அவரது திட்டத்தைக் கூறும் வரை நாம் அவரைக் கேள்வி கேட்டு அனத்தக் கூடாது என்றும் பொருள். இதை உணர்ந்த கணவர்களே "புத்திமான் பலமான் ஆவர்" என்ற பழமொழிக்குப் பொருத்தமானோர். 

இரவு தூங்கப் போகும் வரை தலைவியின் மறு நாள் திட்ட வரைவு வெளியிடப்பட வில்லை. இன்று காலை ரிசல்ட் தெரியாத பதட்டத்தில் எனக்கு வெள்ளன விழிப்பு வந்து விட்டது. கீழே இறங்கி வந்தேன். மாமியார் காபி போட்டுக் கொடுத்து விட்டு, "தம்பி இடியாப்பத்துக்கு ஊற வெச்சிருக்கேன் தேங்காப் பால வெல்லம் போட்டுக் காச்சட்டுமா இல்ல சக்கரை போட்டுக் கலக்கட்டுமா? " என்றார்

இப்படி சோதனைகள் மாமியார் ரூபத்தில் கூட வரலாம். ஆனால் அசகாய சூரர்களான மருமகன்கள் அவற்றில் எல்லாம் சிக்கி விட மாட்டார்கள். 

"அம்மா எதுக்கும் புவனா என்ன ப்ளான் பண்ணிருக்கான்னு கேட்டுக்கிட்டு முடிவு பண்ணிக்குங்களேன்" எனச் சரியான பதிலை சொல்வதற்கும் சதீஷிடம் இருந்து "புவனா, ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு இங்க வர்ரா, நீங்களும் அண்ணியும் கூட வாங்க அவங்க கரூர் கெளம்பினதும் நாம எல்லாரும் கட்டிபாளையம் போயிடலாம்" எனச் செய்தி வந்தது. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை இப்படியெல்லாம் தெளிவாகத் திட்டம் போட சதீஷுக்குத் தெரியாது. இப்பவும் தெரியாது. ஆனால் பேச்சிலராக வாயாடிக் கொண்டிருந்த சதீஷ் இரண்டு வருடங்களுக்கு முன் ஹஸ்பண்டாகப் பதவி உயர்வு பெற்றதில் இருந்து பேச்சு இல்லாராக மாறி வாய் பொத்தி கண்ணீர்க் கதைகளை வரைந்து காட்டிக் கொண்டிருக்கிறார். அதானால் காலையில் அவர் வழி மொழிந்த திட்டமெல்லாம் அவருடையதன்று அது அவர் வழி வந்தது என்பதைப் புரிந்து கொண்டோரெல்லாம் துப்பறியும் சாம்புக்களே. 

இந்தச் செய்தி கிடைத்தவுடன் மகிழ்ச்சியுடன் கரூருக்குப் ஃபோனைப் போட்டு "ம்மா நாங்க லஞ்ச்சுக்கு வந்திடுவோம்" எனச் சொல்லியிருந்தால் நான் "முந்திரிக் கொட்டை முத்தண்ணா" என்ற அவப் பெயருக்கு ஆளாகிப் பெரும் சிக்கலில் சிக்கிச் சின்னா பின்னமாகியிருந்திருப்பேன். 

ஆனால் நான் தான் பெரிய கைப்பிள்ளையாயிற்றே. அப்படியெல்லாம் சறுக்கி விடுவேனா என்ன? தலைவி கீழிறங்கி வந்த பிறகு உத்திரவு வாங்கிக் கொண்டு அப்பாவிற்கு ஃபோனைப் போட்டு தகவல் சொன்னேன். 

அவர் எனக்குத் தந்தையல்லவா அதனால், இந்தா அம்மா கிட்ட ஃபோனக் குடுக்கறேன் நீ அவகிட்டயே சொல்லிரப்பா" எனப் பிழைத்துக் கொண்டார். 

இந்நேரத்துக்கு இப்படியே நீட்டி மொழக்கிக் கிட்டு போய்க் கொண்டிருக்கும் நான் என்ன தான் சொல்ல வர்றேன்னு சுத்தமா கொழம்பிருப்பீங்க. 

அப்படி கொழம்பினவங்க கதையோட முதல் பத்திய வாசிங்க. அந்தக் கேள்விக்குப் பதில் தான் கதையோட தலைப்பு

அதெல்லாம் தேவையே இல்லன்னு சொன்னா நீங்கள்ளாம் "கில்லிங்கோ".

0 வாசிப்புகள்
பகிர்: 0 பகிர்வுகள்

கருத்துகள் (0)

இன்னும் கருத்துகள் எதுவும் இல்லை. முதல் கருத்தை எழுதவும்!